பாடம் 9: வைரமோதிரம்

ஓர் ஊரில் கிழவர் ஒருவர் இருந்தார். அவர் பெரும் செல்வந்தர். அவர் தம் செல்வத்தை தனது மூன்று மைந்தர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார். ஒரு வைர மோதிரம் மட்டும் மிச்சமாய் இருந்தது. அவர் தன் மைந்தர்களைப் பார்த்து “பிள்ளைகளே! ஓர் ஆண்டு வரையில் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வாருங்கள். உங்களுள் மனிதர் செய்யக்கூடிய அரிய செயலைச் செய்பவன் இந்த மோதிரத்தைப் பெறலாம்” என்றார்.

மைந்தர் மூவரும் அவர் சொல்லியபடியே சுற்றுப் பயணம் செய்தனர். எத்தனையோ செயல்களைச் செய்தனர். ஓராண்டு கழிந்ததும் திரும்பி வந்து தந்தையைக் கண்டனர். மூத்தவன் “தந்தையே! ஒருவர் அவருடைய பொருட்களைப் பாதுகாத்துத் தரும்படி என்னிடம் கொடுத்துவிட்டு அயல் ஊருக்குப் போனார். சில மாதங்கள் கழித்து வந்து பொருளைக் கேட்டார். நான் அவரை ஏமாற்றியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. வட்டியும் முதலும் சேர்த்து அவருக்குக் கொடுத்தேன்” என்றான். தந்தையார் “அது நல்லதுதான். ஆனால் அது நல்லவர் எவரும் செய்யக் கூடியதே” என்றார்.

இளையவன் “தந்தையே! நான் கப்பலில் பயணம் செய்தேன். ஒரு குழந்தை தவறிக் கடலில் விழுந்துவிட்டது. நான் உடனே கடலில் குதித்தேன். குழந்தையைக் காப்பாற்றினேன்” என்றான். கிழவர் “மகனே! உயிர் இழக்கவும் அஞ்சாமல் நீ செய்தது வீரச்செயலே. ஆனால் அது வைர மோதிரத்தைப் பெறத் தகுந்த செயல் அன்று” என்றார்.

மூன்றாம் மைந்தன்” தந்தையே! நான் ஒரு நாள் மலைமேல் ஏறினேன். அங்கு செங்குத்தான பாறை மேல் என் கொடும் பகைவன் படுத்து உறங்குவதைக் கண்டேன். அவன் சிறிது புரண்டிருந்தால் பாதாளத்தில் விழுந்து இறந்திருப்பான். நான் அவனை எழுப்பி எச்சரித்துக் காத்தேன்” என்றான்.

கிழவர் அதைக் கேட்டு மகிழ்ந்தார். வைர மோதிரம் உனக்கே உரியது. பகைவனுக்கும் உதவி செய்வதே செய்வதற்கு அரிய செயல்” என்று கூறி அவனுக்கு அந்த வைர மோதிரத்தைப் பரிசாக அளித்தார்.