ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்து நல்லூரிலே 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் கந்தப்பிள்ளை; தாயார் பெயர் சிவகாமி. பெற்றார் இவருக்கு ஆறுமுகம் என்று பெயர் வைத்தனர்.
ஆறுமுகம் தமிழ்ப்புலமை மிகுந்த தந்தையாரிடம் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். பின்னர் நல்லூர் சுப்பிரமணியபிள்ளையிடமும் இருபாலை சேனாதிராய முதலியாரிடமும் உயர்கல்வியைக் கற்றார். தமது பன்னிரண்டு வயதுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்ற ஆறுமுகம் கிறிஸ்த்தவர்களால் தொடங்கப்பட்ட ஆங்கிலப் பாடசாலையிற் சேர்ந்து ஆங்கிலமும் கற்றார். ஆறுமுகத்தின் அதி திறமையையும் விவேகத்தையும் கண்ட பாடசாலை அதிபர் வண. பீற்றர் பேர்சிவல் பாதிரியார் தமது மாணவரை அப் பாடசாலையில் ஆசிரியராக நியமித்தார். இந் நியமனம் 1838ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. அப்பொழுது ஆறுமுகத்துக்கு வயது பதினாறு ஆகும்.
அதிபர் பேர்சிவல் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி ஆசிரியர் ஆறுமுகம் அவர்கள் கிறிஸ்தவர்களின் வேத நூலாகிய விவிலியத்தை (பைபிளை) தமிழில் மொழி பெயர்த்த குழுவில் பணியாற்றினார். சொற்பொழிவுகள் மூலம் தமிழ் மொழியிலும் சைவ சமயத்திலும் மக்களுக்கு அறிவைப் பரப்பி இன உணர்வையும் தேசப் பற்றையும் ஏற்படுத்தினார்.
சைவ சமயச் சூழ்நிலையிலேயே தமிழ்ச் சிறுவர் கல்வி கற்க வேண்டும் என்று கருதினார். அதனால் யாழ்ப்பாணத்திலும் இந்தியாவில் உள்ள சிதம்பரத்திலும் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரிற் பாடசாலைகளை அமைத்தார். மாணவருக்கு வேண்டிய பாடப் புத்தகங்களைத் தாமே எழுதினார். இவர் எழுதிய முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பால பாடப் புத்தகங்கள் இன்றும் தமிழ்மொழியைக் கற்பதற்கு மிகவும் உதவுகின்றன.
புதிய நூல்களை எழுதியதோடு ஏடுகளிலிருந்த பழைய நூல்களையும் பரிசோதித்துப் பதிப்பித்தார். அதன்பொருட்டு யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் அச்சகங்களை நிறுவினார். இலக்கண வினா விடை, இலக்கணச் சுருக்கம், நன்னூற் காண்டிகை உரை, முதலிய பல நூல்களை எழுதி வெளியிட்டார். செய்யுள் நடையிலே அமைந்த பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவற்றை வசனநடையில் எழுதினார். இவரது வசனநடைச் சிறப்பைக் கண்ட தமிழ் உலகம் இவரை ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ எனப் பாராட்டியது. இவரது சொற்பொழிவுத் திறமையைப் பாராட்டித் தமிழ்நாட்டிலுள்ள திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தைச் சூட்டிச் சிறப்பித்தது.
சைவத்தையும் தமிழையும் தமது இரு கண்களாகக் கருதி வளர்த்து ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் தன்னிகரற்ற மேதையாக விளங்கிய ஆறுமுக நாவலர் அவர்கள் 1879ல், தமது 57வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவர் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டே இருக்கின்றார். அவர் பிறந்த நல்லூரில் அவருக்கு முதன் முதலாகச் சிலை எழுப்பப் பட்டுள்ளது. கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் அவருக்குச் சிலை வைத்துக் குருபூசைகள் நடத்தி வருகின்றார்கள்.
'நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
சொல்லுதமிழ் எங்கே சுருதியெங்கே - எல்லவரும்
ஆற்று புராண ஆகமங்கள் எங்கே பிரசங்கம் எங்கே
ஆத்தன் அறிவு எங்கே அறை.'
என்று நாவலர் காலத்துத் தமிழை அறிஞர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களும் வேறு பல அறிஞர்களும் அவரைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
நாவலரை யாழ்ப்பாணத்தவர்கள் நல்லூர்க் கந்தசாமி கோயிலின் அருகில் வெண்ணீறு அணிந்து, உருத்திராக்கம் தரித்து, பட்டாடை உடுத்து சிலையாக வைத்து மதிப்பளிக்கிறார்கள்.