தமிழர்கள் பேணி வளர்த்த கலைகள் பலவற்றுள் பரத நாட்டியமும் ஒன்றாகும். கண்ணுக்கும், காதுக்கும், மனத்துக்கும் மகிழ்ச்சி ஊட்டும் பரதநாட்டியக் கலையை முற்காலத்தில் உருவாக்கியவர் பரத முனிவர் என்பர். பாரத நாட்டில் ஆடப்படும் கலையாதலால் பரத நாட்டியம் எனப் பெயர் பெற்றதென்றும் சிலர் கூறுவர்.
குச்சிப்புடி, மோகினி ஆட்டம், கதகளி, ஒடிசி, மணிப்புரி போன்ற பலவகை இந்திய நாட்டியங்களில் பரத நாட்டியமே மிகச் சிறப்பானதும் பார்ப்போரின் உள்ளங்களைக் கவரவல்லதும் ஆகும் என்று துணிந்து கூறலாம். சதிர் ஆட்டம் என வழங்கப்பட்ட பெயரை கலாசேத்திரத்தை ஆரம்பித்த ருக்மணி அருண்டேல் என்பவரே பரத நாட்டியம் எனப் பெயர் கொடுத்து எல்லா மக்களும் விரும்பும் நாட்டியக் கலையாக மிளிரச் செய்தார்.
பரதநாட்டியம் பாவம், இராகம், தாளம் என்ற மூன்று கூறுகளையும் உள்ளடக்கிய கலை ஆகும். பாவம் என்பது முகம் (கண், வாய்), கை, உடல் அசைவுகளின் மூலம் வெளிப்படுத்தப்படும் அபிநயம் ஆகும். பாவமே பரத நாட்டியத்தின் உயிர்நாடி எனலாம். பரத நாட்டியத்துக்கு உறு துணையாய்ப் பொன் குடத்துக்குப் பொட்டிட்டது போல் அழகு சேர்ப்பது இசையாகும். பலவகை இராகங்களால் ஆன இசைப் பாடல்களை நாட்டியம் ஆடப் பயன்படுத்துவர்.
நாட்டியம் ஆட இன்றியமையாதது தாளம் ஆகும். தாளம் என்பது கால அளவு அடைவு ஆகும். தாளம் எனும் கால அளவுக்கு ஏற்பத் தலை, கழுத்து, கண், தோள், உடல், இடுப்பு, கை, கால் முதலியவற்றை அசைத்து, இசைப் பாடலின் கருத்துக்கு ஏற்ப அபிநயம் பிடிப்பதால் பரத நாட்டியத்தின் அழகு முழுமை பெறுகிறது.
ஆதித் தமிழர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை நாட்டியம் ஆடும் தோற்றத்தில் வணங்கி வழிபடுகின்றார்கள் சைவத் தமிழர். தமிழர்களின் தொன்மையைக் காட்டும் கவின் கலையான பரத நாட்டியத்தை இன்று உலக மக்கள் பலரும் விரும்பிப் பாராட்டியும் கற்றும் வருகின்றார்கள்.
பழம் தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் நாட்டியக் கலை பற்றிய செய்திகளை அறியக் கூடியதாக உள்ளது. மேலும் கலாநிதி ஆனந்தகுமாரசுவாமி அவர்களின் நாட்டியம் பற்றிய நூலும் உலகப் புகழ் பெற்று விளங்குகின்றது.
இன்று உலகில் சாத்திர முறைப்படி ஆடப்படும் நாட்டியங்களில் பரதநாட்டியம் ஒன்றே மொழியின் உதவியின்றி பாபத்தாலும் அபிநயத்தாலும் எதையும் எடுத்துக் கூறும் ஆற்றல் உடையது. உலகில் பரந்து வாழும் தமிழராகிய நாம், புகுந்த இடத்து இலட்சியங்களையும் உள்ளடக்கி பரதக் கலையை உலகம் புகழ வளர்க்கக் கடப்பாடுடையோம்.