பாடம் 21: தாத்தாவின் அறிவுப் பாடம்

என் பெயர் மகிழ்தா. நான் ஆறாம் வகுப்பில் படிக்கிறேன். எனக்கு ஒரு தங்கை வாஞ்சிதாவும் ஒரு தம்பி அகிலனும். சென்ற கோடை விடுமுறையைத் தாத்தாவுடனும் பாட்டியுடனும் கழித்தோம்.

தாத்தா ஒரு நல்ல கமக்காரர். 'கமக்காரரே மக்களின் உணவுக்கு ஆதாரம். மழை பெய்யாவிடின் நாட்டில் பஞ்சம் உண்டாகும். மாந்தர் எவ்வகையில் உழைத்தாலும் அவர்கள் தேடுவது எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்கு உணவு கொடுப்பதற்கே' என்று தாத்தா சொல்வார்கள்.


'மழை பெய்ய வயலில் நீருயரும், நீர் உயர வரம்பு உயரும்.

வரம்பு உயர நெல் உயரும், நெல் உயர மக்கள் உயர்வர்

மக்கள் உயர நாடு உயரும், நாடு உயர அரசு உயரும்'.


எனவே என்றும், கமக்காரர்களே நாட்டைக் கட்டி எழுப்புபவர்கள'; என்று அடிக்கடி கூறுவார்கள்.

பாட்டி இரவில் பழங்கதைகள் கூறுவார். அப்பம், பிட்டு, தோசை, கொழுக்கட்டை, மோதகம், அரிசிப் பலகாரம் என்று சுவையான உணவுகளைச் செய்து தருவார். நாங்கள் எப்படி ஒழுக்கம் உடையவர்களாக நடக்க வேண்டும் என்பதை ஒளவைப் பாட்டியின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் பாடல்களை பாடிக் காட்டுவார். திருக்குறளில் இருந்து சில பயனுள்ள குறள்களைச் சொல்லி விளக்கம் தருவார்.

ஒரு நாள் முழு நிலாவில் முற்றத்தில் மண்ணில் விளையாடினோம். ஒருநாள் தாத்தாவும் எங்களோடு நொடிகளும், புதிரும் கேட்டு விடையும் சொல்லி மகிழ்ந்தார். ஒருநாள் அவர் 'உலகிலே மிக ஆச்சரியமான புதுமைகள் என்ன?' என்று கேட்டார். நான் 'தொலைக் காட்சி' என்று சொன்னேன். வாஞ்சிதா 'கணினி' என்றாள். 'ஹர் ர் ர் ஆகாய விமானம்' என்று சொல்லியவாறு முற்றத்தைச் சுற்றி ஓடினான் அகிலன். 'தொலைபேசி, விண்வெளிக் கப்பல்' என்றேன் நான். 'தாஜ்மகால் மிக அற்புதமான கட்டிடம்' என்றாள் வாஞ்சிதா.

தாத்தா சிரித்தார். 'நீங்கள் தற்காலப் படைப்புகளை எல்லாம் ஆச்சரியமானவை என்றுதான் நினைக்கிறீர்கள். ஆனால் மிகவும் ஆச்சரியமானவை என்ன தெரியுமா? அது எங்கள் ஒவ்வொருவரிலும் இருக்கும் அற்புதங்களே.'

'இரண்டு கண்கள் - பார்த்து மகிழ, வாசித்து அறிவு வளர்க்க உதவுகின்றன. இரண்டு காதுகள் - ஒலியையும் இசையையும் கேட்டு மகிழ, புத்தி கேட்டு நடக்க வழியாகின்றன.

ஒரு நாக்கு - நல்லதைப் பேசவும், சுவைத்து உண்ணவும் பயன்படுகின்றது. ஒரு மூக்கு - சுவாசிக்கவும், சுவைகளையும், நறு மணங்களை மணந்து மகிழ உதவுகின்றது.

தோல் - பொருள்களைத் தொட்டு அறிய, அன்பு உள்ளவர்களைக் கட்டி அணைத்து மகிழ வாய்ப்பை அளிக்கின்றது.

இவை எமது ஐந்து புலன்கள். இவை இல்லை எனில் நீங்கள் முன்கூறிய ஆச்சரியங்களை அறியவோ உணர்ந்து மகிழவோ முடியுமா?'

'மேலும் மனிதராகிய எமக்கு இரண்டு அற்புதமான கொடைகளும் உண்டு அவை என்ன தெரியுமா? அன்பும், சிரிப்பும் ஆகும். நாம் வாழ்க்கையை முற்றாக அனுபவிக்க வேண்டுமா? அப்படியாயின் நாம் ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி வாழ வேண்டும். இந்த அன்புதான் உங்களை என்னுடனும், பாட்டியுடனும்

இணைக்கிறது. சிரித்து வாழ்ந்தால் நோய் அற்றவர்களாக வாழலாம். வாழ்க்கையில் இன்பம் பெறலாம்' என நீண்ட விளக்கம் தந்தார் தாத்தா.

எங்களுக்குள் ஏழு அற்புதங்கள் உண்டு. இதை வாழ்க்கையில் மறக்க மாட்டோம் என்றாள் வாஞ்சிதா. 'அவை என்ன? மகிழ்தா சொல்லு' என்றார் தாத்தா.

'கண் பார்க்க, காது கேட்க, மூக்கு மணக்க, நாக்கு சுவைக்க, தோல் தொட்டுணர, அன்பு அணைக்க, சிரிப்பு மகிழ' என்றாள் மகிழ்தா.

'மிக மிகச் சரி' என்றான் அகிலன்.

எல்லோரும் கைகொட்டிச் சிரித்தனர்.