பாடம் 13:புறநானூற்றில் தமிழர் பண்பாடு

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னமே ஏற்றத்துடன் வாழ்ந்த தமிழர் பண்பாட்டின் சுவடுகள் பல தமிழ் இலக்கியங்கள் மூலம் புலப்படுகின்றன. காலத்தால் பழமை வாய்ந்து, சங்க காலத்தில் தோன்றியதாகக் கூறப்படும் இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் பதினெட்டு தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் அடங்கும் ஒரு பகுதியாகிய எட்டுத்தொகையில் புறநானூறும் ஒன்றாகும். சங்க காலத்தினைச் சேர்ந்த தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலும், மக்களின் வாழ்க்கை முறைகளே பாடல் பொருட்களாக அமைந்துள்ளதனை நாம் காண்கின்றோம். தமிழகத்தில் வாழ்ந்த பல புலவர்களால் பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் பாடப்பட்ட புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு என்பதால், சங்கத்தமிழ் நூல்களில் ஒன்றாகப் புறநானூறு என்னும் பெயர் கொண்டு போற்றப்படுகின்றது. இதனைப் பாடியவர்கள் மாத்திரம் அன்றித் தொகுத்தோரும் வேறு பட்ட காலங்களைச் சேர்ந்தவர்களாவர்.

அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள் அகம், புறம் என்னும் இரு பிரிவுகளாகப் பாடப்பட்டு அக்கால இலக்கியங்களில் இடம் பெறுகின்றன. மனதில் எழும் காதல், அன்பு ஆகிய உணர்வுகளை அகத்திணைப் பாடல்கள் கூறுகின்றன. அது போன்று புறத்திணைப் பாடல்களில் வீரம் புகழ் அறம் போன்ற அரிய பண்புகள் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளன. புறநானூற்றுப் பாடல்களில் நாம் கணியன் பூங்குன்றன் என்னும் புலவரின் சிறப்பான ஒரு பாடலை அவற்றில் ஒன்றாகக் குறிப்பிடலாம். இப் பாடல் தமிழரின் உயர்ந்த, பரந்த மனப்பாங்கை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. உலகளாவிய ரீதியில், மக்கள் அனைவருக்குமே ஏற்ற பாடலாக அமைவது இப்பாடலின் சிறப்பு எனலாம். தமிழரின் உன்னதமான பண்பாட்டைப் பிரதிபலிக்கும் அவரது பாடலை நாமும் படித்துச் சுவைக்கலாம்.



யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புகுவதும் அன்றே வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னாது என்றலும் இலமே மின்னோடு

வானம் தண்துளி தலைஇ ஆறாது

கல் பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படுஉம் புணை போல் ஆருயிர்

முறை வழிப் படுஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனிலும்இலமே.


(கணியன் பூங்குன்றன், புறநானூறு, 192)


All land home, all men kin.

Evil and good are not from others

nor pain and its abating,

Death is not new

and we do not rejoice thinking life is sweet,

If there is something hateful,

even less do we find it cause for grief,

Through the vision of the able ones

we have come to know that hard life takes its course,

as if it were a raft upon the water of a mighty river

roaring as it ever flows on rocks,

swollen because cold drops pour from flashing sky

and so we do not wonder at those big with greatness

And still less do we dispise the small

(Translated by Prof. George Hart)




அருஞ்சொல் விளக்கம்: கேளிர்- உறவினர்; நோதல்-துன்பம்; முனிவு- வருத்தம்; ஆறாது -அமையாது; கல் -மலை; மல்லல் -வலிமை; புணை- தெப்பம்; திறவோர் -அறிவில் சிறந்தோர்.

எல்லா ஊர்களும் நம் ஊரே. மக்கள் யாவரும் உறவினர்களே. எமக்கு ஏற்படும் நன்மையும் கேடும் எம்மால் அன்றி, பிறரால் உண்டு பண்ணப்படுவன அன்று.

நன்மை, தீமை, நோதல், தணிதல், வாழ்தல், சாதல், பெரியோர், சிறியோர், என்ற வேறுபாடுகளைப் பாராட்டி சாதாரண மக்கள் தாமே தமக்குள் வேறுபாடுகளை வளர்த்துத் துன்பப்படுவர். துன்ப இருளுக்கு வெளிச்சம் கொடுப்பதுபோல் மேலே காணும் பாடல் அமைகிறது.

வாழ்க்கையில் வேதனைகள் தொடர்வதும், விலகுவதும் அவரவர் கையில் உண்டு என்பதை நயம்பட இக் கவிதையில் விளக்குகிறார். பிறந்த உயிர்கள் இம்மண்ணில் வாழ்ந்து மறைதல் புதிதல்ல. இன்பம் ஒன்றுக்காகவே வாழ்க்கை என்பதும் துன்பம் வரும்போது வாழ்வை வெறுப்பதும் உயரிய செயல் அல்ல என்பதையும் புலவர் அறிவுறுத்துகின்றார். ஆற்றோடு போகும் தெப்பம் போல, உயிர்கள் தமக்கு விதிக்கப்பட்ட வழிப்படியே ஒழுகுவர். வாழ்க்கையானது ஒவ்வொருவரின் இயல்புக்கு ஏற்ற முறைப்படியே அவரவர் செயல் திறங்களின் வெளிப்பாடு அமையும். இதனை அறிவு கொண்ட சான்றோர்களின் அனுபவங்கள் வாயிலாக அறிந்து தெளிந்ததனால் பெரியவர்களைப் பார்த்து நாம் மலைப்பது இல்லை. அதனினும் மேலாக, ஒரு போதும் சிறியோரைப் பார்த்துப் பரிகசிப்பது இல்லை. இவ்வாறு கூறப்படும் உயர்ந்த பண்பாட்டினைக் கொண்டோராகத் தமிழ் மக்கள் வாழ்ந்தனர் என இக் கவிதை மூலம் விளங்கிப் பெருமை கொள்ள முடிகின்றது.

தற்காலத்தில் விஞ்ஞானத் தொழில்நுட்பத்தால் உலகம் சுருங்கி, உலகக் கிராமமாக உருவாகியுள்ளது. அவ்வாறு முன்னேற்றமான முறையில் உலகம் ஒன்றுபட விரையும் போது மனிதமனம் விரிவடைந்தால்தான், மனிதாபிமானம் என்னும் ஒரு குடைக்கீழ் நல்வாழ்வு உண்டு. ஆனால், இன்று உலகம் முழுவதும் இன, மத, மொழி, கலாசார வேறுபாடுகளால் சுயநலவாதிகள் தமக்கிடையே பூசல்களை தோற்றுவிக்கின்றனர். சுரண்டலினால் திரண்டிருக்கும் அதிகார

வர்க்கத்தினர் தாம் தொடர்ந்து ஆட்சியில் நிலைத்து இருக்க, குறுகிய மனப்பான்மை கொண்ட, பிரிவினை வாதிகளுக்கு மறைமுகமாக ஊக்கம் கொடுகின்றனர். மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் பிரிவினை வாதங்களால் உலக நாடுகள் பலவற்றில் போர் நிலைமைகள் உருவாகின்றன. அதனால் உலக அமைதிக்குப் பங்கம் வரும் அபாயம் தோன்றுகின்றது. சமுதாயத்தினர் அமைதியாக வாழ்வதற்கு சமாதானத்தின் முக்கியம் பற்றி மீண்டும் மீண்டும் வற்புறுத்த வேண்டிய அவசிய தேவை எழுந்துள்ளது.

தனது பரந்த சமூகப் பார்வையால் கண்ட இந்த உண்மையினை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புலவரான கணியன் பூங்குன்றன், காலத்தால் அழியாப் பாடலாகப் பாடியுள்ளார். எனது ஊர், எனது உறவினர் என்ற எல்லையைத் தாண்டி, பரந்த நோக்கில் இப்பாடல் பாடப்படுள்ளது. இனப் பற்று, மொழிப்பற்று, நாட்டுப் பற்று ஆகியவற்றைத் தாண்டி மனிதநேயம் எனும் பெரு நோக்கு இப் பாடலில் பிரகாசிக்கின்றது.

இப் பாடல் சமாதானமான, ஒற்றுமையான உலகத்தை விரும்பிய தமிழரின் பரந்த பண்பாட்டினைப் பிரதிபலிப்பதாகவும், அவர்களது வாழ்வில் இழையோடிய விழுமியங்களை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. தமிழர் மத்தியில் அன்று காணப்பட்ட இதனைப்போன்ற உன்னதமான பண்பாடுகள் கொண்ட சமுதாய நிலையினைப் பல்லாண்டு காலத்தின் பின் இலண்டனில் வாழ்ந்த சேர் தாமஸ் மூர் என்பவர் யூத்தோபியா (ரவழியை -1516) என்ற தமது நூலில் கற்பனை செய்து எழுதி இருப்பதனை அறியலாம்.

இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் தற்போது ஐம்பதுக்கும் மேலான நாடுகளில் புதிய பண்பாட்டுச் சூழலில் வாழ்கின்றனர். பழமை வாய்ந்த இலக்கியங்களைத் தேடிப் படிப்பதனால் அவர்கள் தமது மூதாதையரின் பாரம்பரியம் மிக்க பண்பாட்டின் சிறப்பினை அறிய முடியும். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே சிறப்பாக வகுக்கப்பட்ட அதன் பெருமையைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் தமிழரின் சீர் பூத்த செம்மையை உலகம் எல்லாம் நயந்து போற்றும்.