பாடம் 15:சமுதாயத்தில் இனவெறி

மனிதர்கள் சிறு குழுக்களாக வாழ முற்பட்ட காலங்களில் இருந்து தமது உறவுகளினதும், உரிமைகளினதும் பாதுகாப்புக்காகப் போராடவேண்டி இருந்தது. குழுக்கள் இனங்களாகப் பெருகி, பிரதேச வாரியாக வாழும் சூழ்நிலையில் அவர்களுக்கு இடையே தலைமைகள் வேண்டி இருந்தது. இந்நிலையில் வேறுபட்ட இனங்களுக்கு இடையே ஊடாட்டங்கள் இடம் பெறும்போது பண்பாட்டு முரண்கள் தவிர்க்க முடியாது காணப்பட்டன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவரவர்கள் தத்தமது இனத்தின் மேல் கொண்ட பற்று தீவிரம் அடையும் போது அது கண் மூடித் தனமான வெறி ஆகின்றது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, இன வேற்றுமை காரணமாக ஆசிய ஆபிரிக்க, அமெரிக்க, அவுஸ்திரேலிய நாட்டுப் பூர்வீகக் குடிகளை ஐரோப்பிய வல்லரசுகள் வதைத்த வரலாற்றை யாவரும் அறிவர். இன்றோ ஐரோப்பிய நாடுகள் சனநாயகத்தையும் (Democracy மக்கள் ஆட்சி) மனிதநேயத்தையும் போற்றிப் பேணுகின்றன.

கடந்த இரு நூற்றாண்டுகளில் சமுதாயங்களில் ஏற்பட்ட கல்வி அறிவுப் பெருக்கமும் குறிப்பாக இணையத்தளப் பயனும் சாதி, மத, நிற பேதங்களை அகற்றி மனித நேயத்துடன் வாழத்தூண்டுகின்றன. இருப்பினும் இன, மத, நிற வெறி இல்லாத நாடு இல்லை என்பது வேதனைக்குரிய உண்மையாகும். பிரித்தானிய ஆட்சியின் கீழ் கண்ணியத்தோடும், மதிப்போடும் வாழ்ந்த பல நாடுகள் சுதந்திரம் அடைந்த பின், நிலை கெட்டுத் தரம் கெட்டு இன, மத வாதங்களால் சீரழிந்து போவதை நாம் காண்கின்றோம். தாம் மாத்திரம் வாழ்வதற்காகவும், பிறர் பொருளைக் கவர்வதற்காகவும், அரசியல்வாதிகளும் சர்வாதிகாரிகளும் இனப் பற்று, மதப் பற்று, நாட்டுப் பற்று என்ற போர்வைகளில் மறைந்துகொண்டு, மற்றைய இனத்தை அழிக்க முயல்கின்றனர்.

'அன்பே சிவம்'என்றும்,'தர்மம் சரணம் கச்சாமி' என்றும் 'சகோதரத்துவம்' 'மன்னிப்பே மகிமை' என்றும் போற்றிய சமயங்கள் வாழும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இனவெறியோடு மதத்தையும் கலந்து பயங்கரவாதம் தாண்டவமாடுவதைப் பார்க்க முடிகிறது. ஆபிரிக்காவிலே எல்லோரும் (Negroid) நீக்கிரோ இனத்தவர்களாய் இருந்தும், கொங்கோ, சூடான் போன்ற பல நாட்டினர், தங்களுக்குள்ளே குழுப் பகைமைகொண்டு இன அழிப்பில் ஈடுபடுகின்றனர். அயர்லாந்திலும் இஸ்லாமிய நாடுகளிலும் இனமதக் குழுக்களுக்கிடையே உள்நாட்டுக் கலவரங்கள் நிகழ்கின்றன.

சிறுபான்மையினராக வாழும் மக்கள் தாம் சமூக மேம்பாடு பெறும் நோக்கத்துடன் கடுமையான உழைப்பாளிகளாக இருப்பது வழக்கம். அவர்கள் பல துறைகளிலும் முன்னேறி பிரதான இடம் பெற்று இருப்பர். இவர்களால்தான் சமூகத்தில் தமது வாய்ப்புக்கள் குறைகின்றன என, இயலாமையும், பொறாமையும் உடைய குறுகிய மனப்பான்மை கொண்ட பெரும்பான்மையினர் இனவெறியைத் தூண்டி ஆதாயம் பெறுகின்றனர். சில அரசாங்கங்கள் நேரடியாகவே இத்தகைய சமூக விரோத சக்திகளுக்கு ஆதரவாகச் செயல் படுகின்றன.

இன்று பெரும்பாலான வளர்ச்சி அடைந்த நாடுகளில் இனவெறி அச்சமின்றி மக்கள் வாழ முடியும். இந்நாடுகளில் இன வேறுபாடு காட்டுதல் குற்றமாகும். பெரும்பாலான நாகரிகமும் நல்லுணர்வும் மிக்க மக்கள் மாந்த நேயத்துடன் அனைவரையும் அணைத்து, மதித்து வாழ்கின்றனர். புறத்தே காணும் தோற்றத்தினை விட்டு மனிதரின் அகத்தின் அழகுக்கு அதிக மதிப்பு அளிக்கின்றனர். கல்வியறிவு கொண்டவர்கள் சகிப்புத்தன்மையுடன் சமூக அமைதியை விரும்பி வாழ்கின்றனர்.

மானிட விழுமியங்களின் உச்சத்தைத் தேடும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் இவ்வாறு இனவெறிச் செயல்கள் நிகழ்வது, உலக மாந்தர் ஒவ்வொருவரும் நாணத்தக்கது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்','அரிது அரிது மானிடராதல் அரிது''ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்' போன்ற பண்டைத் தமிழரின் பரந்த தத்துவம் விளக்கப்படல் வேண்டும். சமயங்களின் மூலக்கருத்தான அன்புடைமையைப் போற்றும் தத்துவங்களை யாவரும் அறிந்துபோற்றும்படி செய்தல் வேண்டும்.

பாடசாலைகளில் பண்பாட்டுக் கல்வியையும், பல்சமயக் கல்வியையும் இளமையிலே கற்பித்தல் மூலம் இனங்களுக்கு இடையில் சகோதர உணர்வினை ஏற்படுத்த முடியும். இன்றைய நல்லாட்சிசெய்யும் நாடுகளில் கல்வித்திட்டத்தில் இனவேற்றுமை கொண்ட பதங்களைப் பாவித்தல் கூடத் தவறு எனக் கருதப்படுகின்றது. பாடசாலைகளில் சிறார்கள் வேறுபாடின்றி ஒற்றுமையாகக் கற்பதற்கான சூழல் அமைந்துள்ளது. கல்வி மட்டுமல்லாது உலக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் அனைத்தும் உலகின் நலம் பேணி, மாந்தநேயத்தைத் தங்களது குறிக்கோளாகக் கருத்தில் கொண்டு கடமையாற்றுவதன் மூலம் இனவெறியையும், இனங்கட்கு இடையேயுள்ள முரண்பாடுகளையும் தவிர்க்கலாம்.

மாந்தநேயத்திற்கு எதிரான கொடுமைகள் இடம்பெறுவதற்கு குறுகிய அரசியல் நோக்கம்கொண்ட சில நாடுகள் பின்னணியில் இருந்து, மறைமுகமாக ஊக்கம் கொடுக்கின்றன. இவை நிறுத்தப்படும்வரை இனவெறி தாண்டவம் ஆடுவதைத் தடுக்க முடியாது. வன்செயல்கள் பகிரங்கமாக இடம் பெறும்போது வல்லரசுகள் பாராமுகமாக இருப்பதும், மறைமுகமாக உதவிகள் செய்வதும் இனவெறி கொண்ட வன்செயலாளரை ஊக்கப்படுத்துவதாக அமைகின்றது. சமாதானத்தினை விரும்பும் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து பயங்கரவாத ஆட்சிகளை நீக்குவது மிகவும் அவசியம்.

இன்று உலகம் பல்லினக் கலாச்சாரத்துள் புதைந்துள்ளது. எனவே, மாந்தர் ஒற்றுமை ஒன்றே உலகில் சுபீட்சத்தினை ஏற்படுத்தும் என்பதைப் பரப்புரை செய்தல்வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பாடு மக்களிடையே வேரூன்ற வேண்டும். குறுகிய அரசியல் லாபம் கருதாது, உள்ளங்களில் அன்பைப் பெருக்கவும், மானிடப் பண்பாட்டை மேம்படுத்தவும் ஏற்ற நடவடிக்கைகளை சகல சமூக தாபனங்களும் குறிப்பாக மதத் தலைவர்களும் எடுப்பார்களாயின் இனவெறி அற்ற நாளைய உலகைக் காணலாம்.