15, இராணி வீதி,
இலண்டன்.
2012-09-18
அன்பின் நண்பன் அறிவழகனுக்கு,
நான் நலமே உள்ளேன் உனது நலம் எப்படி? உனது கடிதம் கண்டு பல மாதங்களாகி விட்டன. தொலைபேசியில் கதைப்பதனை விட, நீ எழுதும் கடிதத்தினை வாசிக்கும் இன்பம் தனியானது. படிப்பதற்கு நேரம் ஒதுக்குவது போல எழுதுவதற்கும் நாம் நேரம் ஒதுக்கிட வேண்டும் என விரும்புகிறேன்.
நீ இவ்வாண்டு ஈற்று உயர்வகுப்புத் தேர்வு எழுதவிருக்கிறாய் என நினைக்கிறேன். தேர்வில் நீ நல்ல வெற்றியடைவாய் என்பதில் எனக்கு ஐயமில்லை. நாம் மானுடரின் ஒப்பற்ற பெரும் செல்வம் கல்வியே என்பதை மனதில் வைத்திருந்து, காலத்தை வீணாக்காமல், படிப்பில் அக்கறையாய் இருத்தல் வேண்டும்.
உனது உயர் கல்வியை எத்துறை நோக்கித் தொடர்வது என்பதை, இப்போதே ஆழ எண்ணிச் செயற்படு. இயல்பாகவே ஈடுபாடுள்ள துறையை மட்டும் தேர்ந்தெடுக்காமல், வாழ்வினை மேம்படுத்துவதாகவும், வேலைவாய்ப்புகள் மிகுந்ததாகவும் உள்ள துறையினைத் தேர்ந்து கற்கவேண்டும் என எனது தந்தையார் கூறினார். அது போலவே உனது தந்தையாரும், பாடசாலை ஆசிரியரும் அதற்குரிய பல ஆலோசனைகளை முன் வைப்பார்கள் என நினைக்கின்றேன். யாவற்றையும் கேட்டு உனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் உகந்த, சிறந்த முடிவினை நீயே எடுப்பது நன்று. எமது எதிர் காலம் எமது கைகளில் தான் இருக்கின்றது என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கின்றது.
எனக்கு அடுத்த ஆண்டு பொதுத் தராதர உயர்தரத்தில் சேர இடம் கிடைத்திருக்கிறது. எத்துறையை நான் முதன்மைப்படுத்திக் கற்கலாம் என்று ஆராய்ந்தபோது, அப்பாவும் எனக்கு நல்ல வழிகளைக் காட்டினார். எல்லாவற்றையும் ஆழ எண்ணினேன். இன்றைய வேலைவாய்ப்பு, கணினி மென்பொருள் துறையில் மிகச் சிறப்பாக உள்ளது. வருங்காலத்தில் உலகின் அனைத்து அசைவுமே கணினி மின்னியல், செயற்கைக்கோள் என்பவற்றாலேயே ஆளப்படும். இவை வாழ்வியல் தொடங்கி விண்ணியல், போரியல், வரைகலையியல் என உலகை ஆட்டிப்படைப்பதை நாள்தோறும் நாளிதழ்களில் வாசிக்கின்றோமே.
எனவே, கணினித் துறையில் ஈடுபட வேண்டும் எனவும் என் மனதில் விருப்பம் உள்ளது. இருந்த போதும் எக்காலத்தும் பயனுள்ளதும், நாளைய உலகில் பெருமதிப்பு உடையதாகவும் உள்ளது உயிரியல். ஆகவேதான் எனது முதல் தெரிவாக உயிரியலை தேர்ந்துள்ளேன். உயிரியல் துறையில் இயற்கை வேளாண்மைபற்றிக் கற்று விரிவுரையாளராக வர விரும்புகிறேன். எதிர்காலத்தில் உலகின் கவனத்தைக் கவரப்போவதும், மிகவும் தேவையாக அமையப்போவதும் இயற்கை வேளாண்மை என எண்ணுகின்றேன்.
எமது கல்வி எமது வாழ்வினைச் செம்மைப்படுத்தும் அதே நேரத்தில் நாம் விரும்பும் தொழிலையும் தேர்ந்து எடுக்கும் முறையில் அமையவேண்டும் என்பதே எனது விருப்பம். தற்காலத்தில் உலகு எங்கணும் வேலைவாய்ப்புக்கள் இல்லாத அதே நேரம், கல்வி கற்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. மாணவர்கள் தாம் விரும்பும் துறையில் கற்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். முயற்சி உடைய மாணவர்கள் பாராட்டும்படியான பெறுபேறுகளைப் பெற முடியும். நான் இரண்டு பாடசாலை விடுமுறைகளின் போது கனடா வந்துவிட்டேன். அடுத்த தடவை நான் பெற்றோருடன் பாரிஸ் செல்வதாக இருக்கின்றேன்.அங்கு எனது சிறிய தந்தையார் குடும்பத்துடன் வாழ்கின்றார். அங்கு பல விசேடமான இடங்களைப் பார்வையிடலாம் என அவர் எம்மை அழைத்துள்ளார். எனது தந்தையாருக்கு அவரது வேலைத்தலத்தில் விடுதலை கிடைப்பதனைப் பொறுத்தே எமது பயணம் அமையும்.
கடந்த வருட விடுமுறையின் போது கனடாவின் முக்கியமான இடங்களை எல்லாம் பார்த்ததை நான் மறக்கவில்லை. முதல் தடவை உன்னுடன் சென்று, நயாகரா நீர் வீழ்ச்சியினையும், சீஎன் கோபுரத்தின் உயரத்தையும் பார்த்த வியப்பு எனது மனதினை விட்டு ஒரு போதும் அகலாதே!
என்னைப் போலவே எனது பெற்றோரும் நீ எம்முடன் விடுதலையைக் கழிக்க வருவதனை இட்டு மகிழ்ச்சி அடைகின்றனர். தொலை பேசியில் கதைப்பதை விட, நீ வந்ததும் உன்னோடு நேரில் கலந்து உரையாடும் அனுபவமே வேறுதான்! உனது வரவை எண்ணிப்பார்க்கும் போதே மனம் குதூகலிக்கின்றது. விபரமான உனது பதிலை விரைவில் எதிர் பார்க்கிறேன். யாவரும் பன்னலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
இவண், அன்பின் நண்பன் தமிழ்வேள்.