பாடம் 4: உடற் பயிற்சியும் ஆரோக்கியமும்

தேகாரோக்கியமும் உடற்பயிற்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்பதற்கு ஒப்ப, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு ஊட்டம் மிகுந்த உணவுடன் உடல் உறுப்புக்களுக்கு வேண்டிய பயிற்சிகளும் வேண்டும். தகுந்த பயிற்சி இன்றேல் உடலின் உறுப்புகள் சிறிது சிறிதாகத் தமது வலுவை இழப்பதுடன் பல விதமான நோய்களுக்கு இடமாகும் நிலையும் ஏற்படும். உடல் நலத்தைப் பேணிக் காப்பதற்குத் தனிப்பட்டவர்களின் உடல் நிலைக்கு ஏற்ற உடற் பயிற்சிகள் மிகுந்த பயன் தரும் என்பதில் ஐயமில்லை.

உடற்பயிற்சியின் அவசியம்

சாதாரணமான உடலுழைப்பு செய்யும் போதும் உடல் உறுப்புகள் ஓரளவு பயிற்சி பெறுகின்றன. ஆனால் உடலின் குறிப்பிட்ட பகுதி மட்டும் ஒரே முறையில் தொடர்ந்து இயங்குவது பூரணமான உடற் பயிற்சி ஆவதில்லை. முறையான உடற்பயிற்சி செய்வதன்மூலம், அசைவற்றிருக்கும் அல்லது தேவைப்படும் இயக்கப்பாடு இல்லாது இயங்கும்; உடல் உறுப்புகளும் சீரான இரத்தச் சுற்றோட்டத்துக்கு உட்படுத்தப்படுகின்றன. முறைப்படி உடற்பயிற்சி செய்யும் போது நுரையீரல் வேகமாகச் சுருங்கி விரிவடைவதால் உள்உறுப்புகள் பயிற்சி பெறுகின்றன. உடல் வெப்பமாகி வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும், செயலாற்றும் திறனும் அதிகரிப்பதனால் உடல் உறுதிப்படுகின்றது. மேலும் உடற்பயிற்சி செய்யும் போது வெளியாகும் வியர்வை, உடற் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இரத்தம் சுத்திகரிக்கப் பட்டு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதன் பயனாக நச்சுக் கிருமிகள் அகற்றப்படுவதன் மூலம் உடலின் ஆரோக்கியம் சீர்படுத்தப் படுகின்றது.

விளையாட்டுக்களின் நன்மைகள்

நாட்டுக்கு நாடு மக்கள் தமது உடலைச் செயற்பட வைக்கும் பல விதமான விளையாடல்களை விரும்பி விளையாடுகிறார்கள். பல கிராமிய விளையாட்டுக்களுடன் யோகாசனம், நடத்தல், ஓடுதல், ஆடுதல், நீந்துதல், கயிறு அடித்தல், பந்து விளையாட்டுகள், குத்துச்சண்டை, மல்யுத்தம், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், தையிச்சி, யூடோ, கராட்டி ஆகியவை எல்லாம் உடலுக்குப் பயிற்சி தருபவையாகும். அதிக பிராணவாயுவை உட்கொள்ள வைக்கும் மிதமான பயிற்சிகளும் (Aerobic exercises) தற்போது பிரபலம் அடைந்துள்ளன. சிறு அளவிலான போட்டிகளில் ஈடுபடும் மெய் வல்லுனர்களும், ஒலிம்பிக் போன்ற உலகளாவிய போட்டிகளில் பங்கு கொள்பவர்களும் அவற்றிற்கு ஏற்ற சிறப்பு உடற் பயிற்சிகளில் ஈடுபடுவதனை அறிய முடிகின்றது.

மிதிவண்டிப் பாவனையும் நடைப்பயிற்சியும்

யப்பான், சீனா போன்ற நாடுகளில் மக்கள் உடற்பயிற்சி செய்வதற்காக, அதிகாலையில் உடற்பயிற்சி செய்யும் முறைகள் ஒலிபரப்பப்படுகின்றன. உடல் நலத்திற்கு உகந்தது என்பதனால், மிதிவண்டிப் பாவனையை மக்கள் மத்தியில் ஊக்குவிப்பதில் நெதர்லாந்து, சீனா, யப்பான் போன்ற நாடுகள் முன்னோடி நாடுகளாக விளங்குகின்றன. நெதர்லாந்தைப் பின்பற்றிப் பல ஐரோப்பிய நகரங்களிலும், மக்களின் சுகாதாரத்தினைப் பேணும் முகமாக மிதிவண்டிப் பாவனை அதிகரித்துள்ளது. உடல் நலத்தை மேம்படுத்தும் பயிற்சிகள் பல இருப்பினும், நடைப்பயிற்சி யாவராலும் இலகுவாகச் சிரமம் இன்றிச் செய்யக்கூடியதாகும். நடைப் பயிற்சி மூன்று விதமாக மேற்கொள்ளப்படுகின்றது. மெதுவாக நடத்தல், வேகமாகக் கை வீசி நடத்தல் (power walking), துள்ளுநடை (Jogging) ஆகிய முறைகளில் பயிற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. வயதுக்கும் உடல் நிலைக்கும் ஏற்ற முறையில் நடைப் பயிற்சியை எவருமே தமது வசதிக்கு ஏற்றபடி மேற்கொள்ளலாம்.

உடற்பயிற்சியின் நன்மைகள்

தினமும் இருபது நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலம் வரை உடற்பயிற்சி செய்வதனால் பின்வரும் நன்மைகளைப் பெறலாம் என உடல்நல மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

தற்காலத்தில் மிகையானதும் சீரற்றதுமான உணவுப் பழக்கத்தினால் பெருகி வரும் நோய்களையும் அவற்றினால் ஏற்படும் மரணங்களையும் கட்டுப் படுத்துவதற்கு உடற்பயிற்சி அவசியமாக வேண்டப்படுகின்றது. முறைப்படி பயிற்சி செய்வதனால், உடலிலுள்ள மேலதிக கொழுப்பு கரைந்து உடலுக்குத் தேவையான சக்தி ஆக மாற்றம் அடைகின்றது. அவ்வாறான பயிற்சிகள் உடல் எடையைக் குறைத்து உடல் தோற்றத்தை மேம்படுத்துகின்றன. மன வளத்தை மேம்படுத்தி பல நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், தன்னம்பிக்கையை ஊட்டி, மன அழுத்தத்தைக் குறைப்பதிலும் உடற்பயிற்சிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. அது மாத்திரம் அன்றி இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற பல குறைபாடுகளை, உடற்பயிற்சிகள் மூலமாகத் தவிர்த்துக் கொள்ளலாம் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

யோகாசனப் பயிற்சி

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே யோகிகளும், சித்தர்களும் யோகப் பயிற்சி மூலம் தமது உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருந்து நீண்ட காலம் வாழ்ந்தார்கள் என அறிய முடிகின்றது. பதஞ்சலி முனிவர் போன்ற யோகியரின் மூலம் யோகக்கலை குருகுல முறைப்படி கற்பிக்கப் பட்டு இந்தியா எங்கணும் பரவியது. ஞானிகளாலும், யோகிகளாலும் அருளப்பட்டதாகக் கூறப்படும் யோகாசனப் பயிற்சிகள் பல வகையின. அவை நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள், இருந்துகொண்டு செய்யும் பயிற்சிகள், படுத்திருந்து செய்யும் பயிற்சிகள் எனப் பல முறைகளில் செய்யப்படுகின்றன. ஒரு ஆசிரியரிடம் வரன்முறையாகக் கற்பதன் மூலம்தான், எல்லா வயதினரும் யோகாசனப் பயிற்சிகளைச் சரியாக மேற்கொள்ள முடியும். அவ்வாறு முறையாகக் கற்ற பயிற்சிகளைத் தவறின்றி அப்பியாசிப்பதன் மூலம், நோயற்ற சுக வாழ்வு பெற முடியும் எனப் பயிற்சிகளால் பயன் அடைந்தவர்களும் வைத்தியர்களும் கூறுகின்றார்கள்.

உடற் பயிற்சிகளில் எல்லாம் மிகவும் பழமையானதாக, யோகாசனப் பயிற்சி விளங்குகின்றது. வடமொழியில் உள்ள ‘யூஜ்’ எனும் சொல் அடியில் இருந்து யோகா எனும் சொல் பிறந்தது என்பர். அந்த வார்த்தை உடல், உயிர், உள்ளம் ஆகிய மூன்றும் ஒன்றிணைதல் என்ற பொருளைத் தரும். உயிர் வாழவேண்டும் என்று எமது உள்ளம் விரும்பினால் அதற்கு எமது உடல் நலமாக இருத்தல் அவசியம். உடல், மனம், உயிர் ஆகிய மூன்றும் ஒன்றில் ஒன்று தங்கி இருக்கின்றன என்பதனைப் பின் வரும் பாடல் நயம்படக் கூறுகின்றது.

‘உடம்பார் அழியில் உயிரார் அழிவார் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார். உடம்பினை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.”

உடல் நலத்தினைப் பேணும் நோக்கத்தினை, திருமூலர் எனும் சித்தர் தமது திருமந்திரம் என்ற நூலில் மிகவும் சுருக்கமாகக் கூறியுள்ளார். மேன்மை உடைய உண்மை அறிவினைப் பெறுவதற்குத் தளமாக, உயிரோட்டமுள்ள உடல் வேண்டும். அவ்வுடலை நோய், பிணி அண்டாது காக்கும் தந்திரத்தினை அறிந்து உடலைச் சீரான நிலையில் வைத்திருந்தால்தான், ஆன்மஞானத்தினைப் பெறலாம் என்பது திருமூலர் காட்டும் நெறியாகும்.

சிறுவர்கள் முதல் வயோதிபர் வரை யாவரும், நலத்துடன் இருப்பதற்கும் அகால மரணங்களை தவிர்ப்பதற்கும் உடற்பயிற்சி அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்துகின்றது. அதன் முக்கியத்துவம் அறியப்பட்ட பின்னர் உலகெங்கும் உள்ள பாடசாலைகளிலும், தனிப்பட்டவர்களின் நிலையங்களிலும் மிகுந்த பொருட் செலவில் உடற்பயிற்சிச் சாலைகள் அமைக்கப்பட்டு இயங்குகின்றன. ஆங்கே பலவிதமான நவீன சாதனங்களின் உதவியுடன் உடற்பயிற்சிகளைச் செய்யும் வசதிகள் செய்யப்படுள்ளன. மக்கள் மத்தியில் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முனையும் ஆர்வம் மாணவர்களதும், பொதுமக்களதும் மத்தியில் வளர்ந்து வருவதனைக் காணமுடிகின்றது.