இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மேற்கு நாடுகளில் திரைப்படங்கள் பிரபலமடையத் தொடங்கின. அவற்றைப் பின்பற்றி தமிழ்நாட்டிலிருந்தும் முதன்முதலிலே கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களே வெளிவந்தன. ஆரம்பகாலத் திரைப்படங்களிற் பேச்சுமொழி இணைக்கப்படாது அசைவுகள் மட்டுமே காட்டப்பட்டன. இவற்றை ஊமைப்படங்கள் என்று அழைத்தனர். மக்கள் மத்தியில் ஊமைப் படங்கள் வியப்புக் கலந்த வரவேற்பைப் பெற்றன. தொழில் நுட்ப வளர்ச்சியால் நடிப்புடன் பேச்சும் இணைக்கப்பட்டுப் பார்ப்பதற்கு நிஜம் போலவே பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியதும் மக்களிடையே திரைப்படங்களைப் பார்க்கும் ஆர்வம் மிகவும் பெருகியது. அதனால்; தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு மாபெரும் தொழில் துறையாக வளர்ந்து சமுதாயத்தில் பெரும் செல்வாக்கைச் செலுத்துகின்றது.
தமிழ்ச்சமூகத்தை நன்னெறியிலே வழிப்படுத்தும் அறம், நீதி, பக்தி முதலானவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட புராண இதிகாசக் கதைகளையே ஆரம்ப காலங்களில் திரைப்படமாக்கினர். முதன்முதலில் தமிழில் கீசகவதம் எனும் ஊமைப்படம் 1925ஆம் ஆண்டு வெளிவந்தது. பாரத, இராமாயணக் கதைகள், சிவனடியார்களின் வரலாறு, முதலானவை திரைப்படம் ஆகியதும் இவற்றைப் பார்த்த மக்கள்; அக் கதைகளில் கூறப்பட்ட நீதிக் கருத்துக்களை தமது நிஜ வாழ்விலும் படிப்பினைகளாகக் கொண்டனர். 1935 ஆம் ஆண்டின் பின், தயாரிப்பாளர்கள் புகழ்பெற்ற சமூக நாவல்களையும் கதைகளையும் தழுவி மேனகா, இடம்பாச்சாரி போன்ற திரைப்படங்களை வெளியிட்டனர். திரைப்படங்கள் மக்களின் விழுமியங்களைப் பாதிக்கின்றது என்ற ஒரு கருத்து நிலையும், நடிகர்களை நாடோடிகளாகப் பார்க்கும் அவல நிலையும், அக்காலச் சமுதாயத்தினரின் மத்தியில் நிலவிவந்தமை குறிப்பிடத்தக்கது.
விடுதலை, பெண்ணுரிமை, சாதிப் பிரிவினை போன்ற கருப் பொருட்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட, நவீன உரை நடையிலான கதைகளும் பாடல்களும் கொண்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. சமுதாயத்தில் அதன் தாக்கம் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. திரைப்படங்களினூடு தமிழ்ப் பேச்சுநடையும் ஒருவகைப் புதிய பாணியில் அமைந்தது. ஐம்பது அறுபதுகளில் வெளியான தமிழ்ச் சினிமாக்கள் பல பேச்சு நடைக்காக மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டன. பிரபலமான சினிமா வசனங்கள் பட்டிதொட்டி தோறும் பேசப்பட்டன. சினிமாவின் வளர்ச்சி கவிதை, உரைநடை, இசை, நடனம் ஆகிய துறைகளில் புதிய பரிமாணங்களைத் தோற்றுவித்தது. கதைகளும் பாடல்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக அமைந்ததால் திரைப்படங்களை விரும்பி இரசிக்கும் தன்மை மக்கள் மத்தியில் உருவாகி, திரைத்துறை அமோக வளர்ச்சி பெற்றது.
காலப்போக்கில் கூத்தாடிகள் என அழைக்கப்பட்டவர்கள் நடிகர்கள் என்றும், நட்சத்திரங்கள் என்றும் பாராட்டப்பட்டு, புதிய சமூக அந்தஸ்த்தைப் பெற்றார்கள். மக்கள் மத்தியில் நடிகர்களின் விசிறிகள் உருவாயினர். நடிகர்களின் பெயரால் கழகங்களும் மன்றங்களும் உருவாக்கப்பட்டன. புதிய தலைமுறையினர் மத்தியில் திரைப்பட நடிகர்களைத் தமது வழிகாட்டித் தலைவர்களாகக் கற்பனை செய்து கொள்ளும் மனப்பான்மை ஆரம்பித்தது. சினிமா எனும் மாயவலையுள் கட்டுண்ட சிலர், குறிப்பாக தமிழ் இரசிகர்கள் நடிகர்களின் செல்வாக்கால் அவர்களது பிம்பங்களுக்கு மாலை சூடவும், பாலாபிஷேகம் செய்யவும் தலைப்பட்டனர். காலப் போக்கில் நடிகர்களும் அவர்களுடன் பங்கு கொண்டவர்களும் மக்கள் ஆதரவைப் பெற்றதன் மூலம் அரசியலிலும் செல்வாக்குச் செலுத்த முடிந்தது. சமூகத்தின் இருண்ட தாழ்வான பகுதிகளைப் பிரதிபலிக்கும் வகையில் வெளிவரும் சினிமா, சமுதாயத்தின் பலவீனங்களுக்குத் தீனியாக அமைவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இடையில் ஒரு பொழுதுபோக்கு ஊடகமாகத் தமிழ்த் திரைப்படங்கள் திகழ்கின்றன. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் காலங்காலமாக வாழும் தமிழர்களும் தமிழ்த் திரைப்படங்களின் ஆதரவாளர்களாக இருப்பது திரைப்படத் தொழிலின் வணிக வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கின்றது. தற்காலத்தில் ஈழநாட்டுத் தமிழரின் உலகப் பரம்பல், வளைகுடா நாட்டு வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக உலகின் பல நாடுகளிலும் குடியேறியிருக்கும் தமிழர்கள் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு பரந்த சந்தையை உருவாக்கித் தருகின்றனர். ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாகத் தமிழ்த் திரைப்படங்களும் ஒரே நாளில் உலகெங்கும் வெளியிடப்படுகின்றன. வெளிநாட்டு விநியோக உரிமைகள், வெளிநாட்டுத் தொலைக்காட்சி உரிமைகள் ஆகியவற்றின் விற்பனைகள் மூலம் கணிசமான பணம் கைமாறுகின்றது. தவறான வழியில், தவறானவர்களின் கைகளில் பணம் குவிவதற்கும் சினிமாத்துறை ஓரளவில் காரணமாகின்றது. சமுதாயத்தில் கறுப்புப்பண ஊடுருவல், வருமானவரி ஏய்ப்பு வன்முறை போன்ற சீர்கேடுகளும் இடம் பெறுவதனை ஊடகங்கள் மூலம் அறிய முடிகின்றது.
தமது முதலீட்டைப் பன்மடங்காக்கும் நோக்கத்திற்காக பெரும் பொருட்செலவிலே தயாராகும் பல தற்காலத் தமிழ்த் திரைப்படங்கள் சமூகச் சீரழிவுக்குத் துணை போகின்றன. மேலை நாட்டுத் திரைப் படங்களைப் பின்பற்றித் தமிழ்த் திரைப்படங்களில் வன்முறைக் கலாசாரம், மதுப்பாவனை, மாதரைப் பழித்தல், பழிவாங்கும் சுபாவம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆபாசம் முதலானவை இடம்பெறுவதையும் அவதானிக்க முடிகின்றது;. நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி அதியற்புத, கற்பனைக்கும் எட்டாத பல விசித்திரக் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. யதார்த்தம் அற்ற கற்பனைகள் நிறைந்த திரைப்படங்கள் பார்வையாளர் தாம் அறியாமலேயே மனச் சிதைவுக்கு ஆளாகும் நிலையை ஏற்படுத்தும். மனிதரின் பலவீனங்களுக்குத் தீனி போடும் புறக் கவர்ச்சிகளைத் தமது திரைப்படங்களில் முதன்மைப் படுத்தலும் போக்கு அதிகரித்துள்ளது. திரைப்படங்களில் காண்பிக்கப்படும் கீழ்த்தரக் காட்சிகள், நிலையான மனம் இல்லாதவர்களைத் தீங்கான பாதையில் சிந்திக்கத் தூண்டக் கூடுமாதலால், சமுதாய நன்மைக்குத் தீங்கு நேரிடும் அபாயம் காணப் படுகின்றது எனப் பலர் கருதுகின்றனர்.
பண வலிமை கொண்ட வணிகரும், பல்வேறு சமூக அமைப்புக்களும், பட விநியோகத்தர்களும் தமிழ்த் திரைப்படத் துறையின் மீது தங்கள் கட்டுப்பாட்டை வைத்து இருக்க முயல்கின்றனர். தமது ஊது குழல்களான ஊடகங்களின் வலிமையை உபயோகித்து, மக்கள் ஆதரவைப் பெறுவதன் மூலம் அரசியலில் தம்மை வளர்த்துக்கொள்ளும் போக்கு தமிழ் சினிமாவிலும் வளர்ந்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாகத் திரைப் படங்கள் மூலம் தங்க முலாம் பூசிக்கொள்ளும் பல அரசியல் வாதிகளால் பொதுமக்கள் ஏய்க்கப் பட்டு வருகின்றனர். அவர்களால் சமூகத்தின் பல மட்டங்களில் மறைமுகமாக ஊழலில் வேரூன்றப்படுவதும் சமுதாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அட்டைக்கத்தி வீரர்கள் தமது பண பலத்தின் மூலம் கடந்த காலங்களில் அடியாட்களின் துணையுடன் அரசியலில் தலைமைப் பொறுப்புக்களை ஏற்கும் அடாவடித்தனமும், பொதுமக்கள் அவர்களிடம் மறைமுகமாகக் கையேந்தும் அடிமைத்தனமும் பெருகியுள்ளது. ஆளும் கட்சிகளும் அரசியல் வாதிகளும் நடிகர்களின் ஆதரவில் அரங்கேற வேண்டிய அவலமும் சமூகத்தினைப் பீடித்த பெரும் பிணி என்றே கூற வேண்டும்.
சமூக வழக்கங்கள், நாட்டு நடப்புகள், பண்பாட்டுப் போக்குகள் ஆகியவை குறித்த தோற்றப்பாட்டை நிறுவுவதில் தமிழ்த் திரைப்படங்களின் பங்கு இன்றியமையாதது. இப்பொறுப்பை உணராமல் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதாகவும், தமிழ்த் திரைப்படத்துறை ஏற்படுத்தும் நல் விளைவுகளைக் காட்டிலும் தீய விளைவுகளே அதிகம் எனவும் பல குற்றச் சாட்டுகள் சமுதாய நலனைக் கருதும் சிந்தனையாளரிடம் இருந்து எழுகின்றன. திரைப்படங்கள், மக்களின் உண்மையான வாழ்க்கையை மறைத்து, மாயத் தோற்றமான கதைக் களங்களில் இயங்குவதால், தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்களும், பிற நாட்டவர்களும் தமிழர்கள் குறித்த தவறான, மிகைப் படுத்தப்பட்ட புரிதலைப் பெறவும் திரைப்படங்கள் வழிவகுக்கின்றன என்ற கருத்தும் நிலவுகின்றது.
தமது கையில் இருக்கும் வலிமை மிக்க ஊடகத்தின் மூலம் திரைப்படத் துறையில் ஈடுபடுவோர் சமூகப் பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பாதுகாக்கவும் விழுமியங்களைப்; பேணவும் வளர்த்தெடுக்கவும் முன் வரல் வேண்டும். முதலீட்டுப் பெருக்கத்தினை மாத்திரம் கருத்தில் கொள்ளாது சமுதாய நலன் கொண்டவராகச் செயற்படல் வேண்டும். தயாரிப்பாளர்களும் நடிகர்களும் அவலங்களையும், அலங்கோலங்களையும் நியாயப்படுத்தும் ஈனத்தொழிலை ஒழித்து, தரத்தில் உயர்ந்த சமுதாய நலன் பேணும் திரைப்படங்களை மக்களுக்கு அளிக்க முன்வருதல் வேண்டும்.
தீமைகளுக்குத் தீனி போடும் ஒவ்வாத திரைப்படங்களை மக்கள் நிராகரித்தல் வேண்டும். அதே சமயம் தரமான கலைப் படைப்புகளுக்கு வரவேற்பு வழங்கும் மனப்பாங்கு மக்கள் மத்தியில் வளர வேண்டும். அதற்கேற்ப ஆரோக்கியமான சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக உன்னதமான திரைப்படங்கள் வெளியிடப்படுதல் வேண்டும். பொழுதுபோக்குக்காக மட்டும் அன்றிப் புதிய சமுதாய சிந்தனைகளையும் புதிய பார்வை கொண்ட நவீன உத்திகளையும் கையாண்டு தயாரித்தல் வேண்டும். புதிய தலைமுறையினரால் தமிழ் சினிமாவில் விஞ்ஞான நவீனங்களை நுட்பமான தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கும்; போக்கு சமீபகாலமாக இடம்பெறுவதனைக் காணக் கூடியதாக உள்ளது.