பாடம் 6: சிலப்பதிகாரம்

பெயர் விளக்கம்

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் எனும் கதையை, மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் கூறியதாகவும் அதனை இளங்கோவடிகள் காப்பியமாகப் பாடினார் எனவும் கூறப்படுகின்றது. சிலப்பதிகாரம் புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று பகுதிகளாகப் பாடப்பட்டுள்ளது. இக் காப்பியத்தின் தலைவியான கண்ணகியின் காலில் அணியப் பெற்ற சிலம்பே கதையின் நிகழ்விற்கு அடிப்படையானமையால் அவ்வணியின் பெயராலேயே காப்பியம் அழைக்கப்பட்டது.

புகார் காண்டம்

சிலம்பின் கதை சோழ நாட்டில் ஆரம்பிக்கின்றது. புகார் நகரப் பெரு வணிகன் மாநாய்கன். அவன் மகள் கண்ணகி;. அதே நகரத்து உயர்ந்து ஓங்கு செல்வம் கொண்ட மாசாத்துவான் மகன் கோவலன். புகார் நகரமே விழாக் கோலம் கொள்ள கோவலன் கண்ணகி திருமணம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. அவர்கள் இனிதே வாழ்ந்து வரும் காலத்தில் சோழன் அவையில் நடந்த அரங்கேற்றத்தில் தலைக் கோல் அரிவை என்ற பட்டத்தையும் 1008 கழஞ்சு பொன் விலை மதிப்புக்கொண்ட பச்சை மாலையையும் பரிசாகப் பெற்ற ஆடல் அழகி மாதவி பால் கோவலன் மையல் கொண்டான். தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து கோவலன் மாதவியுடன் வாழத் தலைப்பட்டான். அவர்கள் மணிமேகலை என்னும் மகளையும் பெற்றனர்.

இன்பமாக வாழ்ந்து வந்த காலத்தே புகார் நகரில் கொண்டாடப்பட்ட இந்திர விழாவுக்கு கோவலனும் மாதவியும் சென்றனர். அங்கு கோவலன் பாடிய காதற் பாடல்களுள் அவன் வேறு யாரையோ விரும்பும் குறிப்பு இருப்பதாக நினைத்த மாதவி, தானும் ஒரு குறிப்புடையவள் போல யாழிசையோடு பாடினாள். மாதவியின் பாடல் கேட்ட கோவலன்,

“கானல்வரி யான்பாடத் தான் ஒன்றின்மேல் மனம்வைத்து மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்”

என அவளை இழிவாக நினைத்து மாதவியை விட்டுப் பிரிந்து, மனைவி கண்ணகியிடம் சென்றான். “மாதவியோடு வாழ்ந்து என் குலம் தந்த குன்று போன்ற பொருளை எல்லாம் இழந்துவிட்டேன். அது நாணமாக இருக்கிறது என்கிறான். மாதவிக்கு மேலும் கொடுக்க ஒன்றுமில்லை என வருந்துகிறான் போலும் என எண்ணிய கண்ணகி “என்னிடம் விலை உயர்ந்த காற்சிலம்புகள் உள்ளன” என்கிறாள். தன் மனைவியின் உயர்ந்த உள்ளத்தைப் புரிந்து தன் செயலுக்கு வருந்துகிறான் கோவலன். அச் சிலம்பையே முதலாகக் கொண்டு மதுரை சென்று வணிகம் செய்யலாம்;, புறப்படுவோம் வா! என்கிறான். கண்ணகியும் மறுப்பு இன்றிக் கோவலனைப் பின் தொடர்ந்தாள். கொடிய கானகத்தின் ஊடாக இருவரும் மதுரை நகர் நோக்கி நெடுவழி நடந்தனர்.

மதுரைக் காண்டம் புகார் நகரிலிருந்து மதுரை வரை அவர்களுக்கு வழித்துணையாகச் சமணப் பெண் துறவி கவுந்தியடிகள் வருகிறார். அவர்கள் சோழ நாட்டு வளங்களைப் பார்த்துக் கொண்டே பயணம் செய்து சீரங்கத்தை அடைகின்றனர். பின் காவிரியைக் கடந்து நடக்கின்றனர். பயணம் தொடர்ந்து அவர்கள் வைகை ஆற்றைக் கடந்து மதுரையின் மதில் புறத்தில் உள்ள புறஞ்சேரியை அடைகின்றனர். அங்கு கவுந்தி அடிகளின் துணையால் மாதரி என்பவள் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். கண்ணகி, மாதரியின் மகள் ஐயை துணையுடன் உணவு சமைத்துக் கோவலனுக்குப் படைக்கிறாள்.

“என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த பொன்னே கொடியே புனைபூங் கோதாய்” என்று தன் தீங்கை எல்லாம் பொறுத்துக் கொண்ட கண்ணகியைக் கோவலன் போற்றினான். பொருள் ஈட்டும் நோக்கம் கொண்ட கோவலன் மறுநாள் காலையில் கண்ணகியின் சிலம்பில் ஒன்றை எடுத்து மதுரை நகரின் கடைத் தெருவில் விற்றுவரச் செல்கிறான். அவன் எதிரே நூறு பொற் கொல்லர்களுடன் அரண்மனைப் பொற்கொல்லன் வருகிறான். கோவலன் பொற் கொல்லனிடம் கண்ணகியின் சிலம்பைக் காட்டி “அரசனுடைய தேவிக்குப் பொருத்தமான இச் சிலம்பின் விலையை நீ கூற முடியுமா” எனக் கேட்கிறான். பொற் கொல்லன் தான் திருடிய அரசியின் அரசியின் சிலம்போடு இச் சிலம்பு ஒத்திருப்பது கண்டு தேவியின் சிலம்பைத் திருடிய கள்வனைத் தான் கண்டதாக அரசனிடம் சென்று வஞ்சகமாகக் கூறினான். “கள்வன் கையில் அச் சிலம்பு இருப்பின் அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருக.” என அரசன் முறையாக விசாரணை செய்யாது ஏவலர்க்கு ஆணையிடுகிறான். இதனால் கோவலன் கொலைப்படுகிறான்.

கண்ணகி தங்கி இருந்த புறஞ்சேரியில் ஆய்ச்சியர்கள் சில தீய நிமித்தங்களைக் கண்டதால் வரும் துயர்கள் நீக்குவதற்காகக் கண்ணனைப் போற்றிக் குரவைக் கூத்தினை நிகழ்த்தினர். ஆய்ச்சியர் கண்ணனுடைய அவதாரச் சிறப்புக்களை எல்லாம் வியந்து போற்றிப் பாடி ஆடினார்கள். கூத்தின் முடிவில் கோவலன் கொலைப்பட்டான் என்ற செய்தி வருகிறது. அக் கொடும் செய்தி கேட்ட கண்ணகி மனதில் துயரமும் சினமும் பொங்க அழுது புலம்பி அரற்றுகிறாள். “மன்னவன் விசாரிக்காது வழங்கிய தண்டனையால் திருடன் என்று பழி சுமத்தப்பட்டு என் கணவன் கொலைப்பட்டான். அவனுக்கு ஏற்பட்ட பழியைத் துடைப்பேன்” என்று வீறு கொண்டு எழுகிறாள். கதிரவனைப் பார்த்துக் கள்வனா என் கணவன்? என்று கேட்கிறாள். அப்போது “நின் கணவன் கள்வன் அல்லன்” என ஒரு செய்தி வானத்திலிருந்து அசரீரியாகப் பிறந்ததை யாவரும் கேட்டனர்.

வஞ்சிக் காண்டம்

ஒரு சிலம்பைக் கையில் ஏந்தியவளாகக் கண்ணகி கொடும் சினத்துடன் பாண்டிய மன்னனின் அரண்மனை வாயிலுக்குச் சென்று, தனது வருகையைத் தெரிவிக்குமாறு வாயில் காவலனிடம் அறைந்தாள்.

“வாயி லோயே! வாயி லோயே! அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே! இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று அறிவிப் பாயே! அறிவிப் பாயே!”

வாயில் காவலன் வழிகாட்ட அரசவைக்குள் சென்று பாண்டிய மன்னனிடம், தேரா மன்னா! என் கால் சிலம்பை விலைபேச முயன்று உன்னால் கொல்லப்பட்ட கோவலன் மனைவி நான் எனப் பின்வருமாறு கூறினாள்.

“வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி கண்ணகி யென்பதென் பெயரே”

பெண்ணணங்கே! கள்வனைக் கோறல் கடுங்கோலன்று” எனப் பாண்டிய மன்னன் கூறினான்.

“வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை நற்றிறம் படராக் கொற்கை வேந்தே என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே எனத் தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே தருகெனத் தந்து தான்முன் வைப்பக் கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோவலன்”.

என் சிலம்பு மணிகளை உள்ளீடாகக் கொண்டது” எனக் கண்ணகி கூற, பாண்டியன் தன் தேவி சிலம்பு முத்துப் பரலை உடையது எனக் கூறிக் கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பை வரவழைத்துக் கொடுக்கிறான் கண்ணகி தனது சிலம்பை உடைக்கிறாள். அதிலிருந்து மாணிக்கப் பரல் தெறித்து வீழ்கிறது. மன்னனின் கொற்றக்குடை தாழ்ந்தது. செங்கோல் வளைந்தது.

“பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் யானோ கள்வன் மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக் கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.”

பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட யான் அரசன் அல்லன்: யானே கள்வன் எனக் கூறிப் பாண்டிய மன்னன் வீழ்ந்து மடிகின்றான். அது கண்ட பாண்டிமாதேவியும் உயிர்விடுகிறாள்.

“நான் ஒரு பத்தினியாகின் இந்த அரசையும் மதுரையையும் ஒழிப்பேன்” எனக் கண்ணகி சூள் உரைக்கிறாள். அப்போது தீக்கடவுள் தோன்றி அவளிடம் வேண்டும் வரம் யாது என வினாவிய போது “பார்ப்பனர், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழந்தைகள் ஆகியோரை விடுத்துத் தீயவர்களை மட்டும் அழிக்க” என கண்ணகி அனல் கடவுளுக்கு ஆணையிட்டாள். அவ்வாறே மதுரை நகரம் தீப்பிடித்து எரிந்தது.

மதுரையின் காவல் தெய்வமான மதுராபதி, கண்ணகி முன் தோன்றிக் கோவலன் கொலைப்பட்டதற்கான காரணம் அவன் முற்பிறப்பில் செய்த தீவினைதான் எனக் கூறி, மதுரையைத் தீயிலிருந்து விடுவித்தாள். வெஞ்சினம் தீர்ந்த கண்ணகி சேர நாட்டை நோக்கி நடந்து சென்றாள். அங்குள்ள நெடுவேள் குன்றின் கீழ் ஒரு வேங்கை மரத்தின் கீழ் நின்ற கண்ணகியை இந்திரன் முதலிய தேவர் வந்து போற்றினர். தேவர்களுடன் வந்து இருந்த கோவலனோடு சேர்ந்து வான ஊர்தியில் ஏறிக் கண்ணகி சுவர்க்கம் சென்றாள்.

கண்ணகிக்குச் சிலை

எடுத்தல் கண்ணகி வானுலகு சென்ற காட்சியைக் கண்ட குன்றக் குறவர்கள், அவளைத் தம் குல தெய்வமாகக் கருதி அவளுக்காகக் குரவைக் கூத்து நிகழ்த்தினர். அக் குறவர்கள் மலைவளம் காணவந்த அரசன் சேரன் செங்குட்டுவனுடன் வந்த இளங்கோவடிகளிடம் தாம் கண்ட காட்சியை எடுத்துரைத்தனர். அது கேட்ட சேரமன்னன் கண்ணகிக்குச் சிலை வடிக்க இமயத்தில் கல் எடுப்பித்தனன். தமிழர்களின் வீரத்தைப் பழித்த வடநாட்டு அரசர்களான கனக விஜயர்களைக் கொண்டு அக்கல்லைச் சுமந்து வரச்செய்தான். தெய்வ அம்சம் கொண்ட கண்ணகியை மக்கள் வழிபடும் முகமாக இமயக் கல்லில் வடிக்கப்பட்ட கண்ணகியின் சிலையைக் கங்கை நீர் கொண்டு மன்னன் புனித நீராட்டினான். இவ்வாறு சேர மன்னன் செங்குட்டுவன் பத்தினித் தெய்வமான கண்ணகிக்குக் கோயில் கட்டினான் எனும் செய்தியைப் பழம் இலக்கியங்கள் அறியத்தருகின்றன.

சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று கருத்துக்கள்

அரசியல் பிழைத்தவருக்கு அறம் கூற்றாகும்| பத்தினிப் பெண்ணை உலகம் போற்றும்;;; ஊழ்வினை தவறாது வந்து அதற்கான பலனை அடையச் செய்யும். மேற்காணும் மூன்று உன்னதமான தமிழ்மக்கள் போற்றும் விழுமியங்களை வலியுறுத்தும் மக்கள் காப்பியம் எனச் சிலப்பதிகாரம் அறிஞர் பலராலும் போற்றப்படுகின்றது.