பாடம் 9: முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர்

இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் ஆழ்ந்த அறிவும் புலமையும் கொண்ட பேரறிஞராக விளங்கியமையால் விபுலானந்த அடிகளை முத்தமிழ் வித்தகர் எனக் கூறுகின்றார்கள். முத்தமிழ்மட்டும் அன்றி, அவர் சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை, இலக்கியம் ஆகிய துறைகளிலும் திறமை கொண்டவராவார். கிழக்கு இலங்கையில் மட்டக்களப்பின் தென் கிழக்கே உள்ள காரதீவில் சான்றோராக வாழ்ந்த சாமித்தம்பியும் கண்ணம்மையும் விபுலானந்தரின் பெற்றோராவார். அவர் களது தவப் புதல்வனாக 1892ஆம் ஆண்டு வைகாசி மாதம் மூன்றாம் நாளில் அடிகளார் பிறந்த போது பெற்றோர் அவருக்கு மயில்வாகனன் என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

ஆரம்பக் கல்வி

மயில்வாகனனின் ஆரம்பக் கல்வியை காரைதீவு “மிசன்”; பாடசாலையிலும், உயர் கல்வியை மட்டக்களப்பு “செயின் மைக்கல்” கல்லூரியிலும் கற்பதற்கான ஒழுங்குகளைச் செய்தார்கள். தமிழ் ஆர்வலராக இருந்தமையால் தந்தையாரும், தாய்மாமன் வசந்தராபிள்ளையும் மயில்வாகனனார் தமிழை முறையாகக் கற்பதற்குப் பெரும் துணையாக இருந்தனர். மயில்வாகனனார் வடமொழியிலும் தமிழிலும் பாண்டித்தியம் கொண்ட வைத்தியலிங்க தேசிகரிடமும் பாடம் கேட்கும் வாய்ப்புப் பெற்றார்.

பணித்திறமை

“சீனியர் கேம்பிறிச்” தேர்வில் 1912ல் முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்த பின்னர் மயில்வாகனன் கொழும்பிலுள்ள ஆசிரியர் கல்லூரியில் 1916ல் சேர்ந்து பயிற்றப்பட்ட ஆசிரியரானார். பின்னர் இலண்டன் பல்கலைக் கழகத் தேர்வில் விஞ்ஞான இளமாணிப் பட்டம் (BSc) பெற்றார். இதே வேளை மதுரைத் தமிழ் சங்கத்தினால் நடத்தப்படும் பண்டிதத் தேர்விலும் தோற்றிப் பண்டிதர் பட்டம் பெற்ற முதல் இலங்கை மாணவனும் விபுலானந்தர் ஆவார். விபுலானந்தரது ஆசிரியப் பணி, 1916ல் அவர் படித்த “செயின் மைக்கலிலும் பின்னர் 1919ல் யாழ்ப்பாணம் “செயின் பத்திரிசியார்” கல்லூரியிலும் தொடர்ந்தது. அவரது திறமையின் காரணமாக 1920ல் மானிப்பாய் இந்துக்கல்லூரி அவருக்குத் தலைமை ஆசிரியர் பதவியை வழங்கிப் பெருமை பெற்றது.

இராமகிருஷ்ண சபை

இயல்பாகவே இறைநாட்டம் கொண்ட விபுலானந்தர், ராமகிருஷ்ண சபையின் சேவையை அறிந்து அதனுடன் இணைய விருப்பம் கொண்டிருந்தார். இலங்கைக்கு வருகை தந்த சுவாமி சர்வானந்தாவுடன் ஏற்பட்ட தொடர்பு, விபுலானந்தரின் உள்ளத்தில் துறவு எண்ணத்தை மேலும் தூண்டியது. அடி மனத்தில் இருந்த துறவுணர்வு பெருகியதனால், ஆசிரியப் பதவியைத் துறந்து 1922ம் ஆண்டில் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்து கொண்டார். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சிவானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் மயில்வாகனனுக்குப் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. அதன் பயனாக சுவாமி விபுலானந்தர் என்னும் நாமம் பெற்று ஆன்மிக வழிகாட்டியாக துறவு வாழ்வை மேற்கொண்டார்.

நிர்வாகத் திறமை

இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும் வேதாந்த கேசரி (ஏநனயவெய முநளயசi)என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் இரண்டு வருடங்கள் ஆசிரியராக இருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். இலங்கையில் ஸ்ரீ ராமகிருஷ்ண சபை நடத்தி வந்த பள்ளிகளைக் கையேற்றுச் சிறப்பாக நிர்வகித்தார். அவரது எண்ணம், சொல், செயல் ஆகியவை ராமகிருஷ்ண மகரிஷியின் போதனைகளின் வெளிப்பாடாகவே காணப்பட்டன. அவரது உயர்ந்த உள்ளத்தின் கனிவு பின்வரும் அவரது தெளிந்த நடையில் அமைந்த பாடல் மூலம் புலப்படுகின்றது.

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ? வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

மட்டக்களப்பில் சிவானந்த வித்தியாசாலையை அடிகளார் ஆரம்பித்து ஆங்கிலம், தமிழ், சிங்களம், இலத்தீன் ஆகிய மொழிகளைப் போதிக்கும்படி வழி செய்தார். இன்று அப்பாடசாலையின் ஒரு பிரிவாகக் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கவின்கலைப் பிரிவு இயங்குகின்றது. தமிழ்மொழி கற்பதில் ஆர்வம் உள்ளவர்களையும், தமிழ் ஆசிரியர்களையும் மேலும் ஊக்கப்படுத்தும் பொருட்டு, யாழ்ப்பாணத்தில் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தை நிறுவினார். இதனூடாகப் பிரவேச பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் தேர்வுகள் நடாத்தப்பட்டன. இந்தியாவுக்குச் சென்றுதான் பண்டிதர் பட்டம் பெறலாம் என்ற நிலை மாறி, படித்தவர்கள் பண்டிதர் பரீட்சைகட்கு இலங்கையிலே தோற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

பேராசிரியர் பணி

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்பேராசிரியர் பணியை, செட்டி நாட்டரசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, 1931ல் விபுலானந்தர் ஏற்றுக் கொண்டார். இலங்கைப் பல்கலைக்கழகம் 1943ல் ஆரம்பிக்கப்பட்ட போது, அவர் இலங்கையிலும் தமிழ்ப் பேராசிரியராக நியமனம் பெற்றார். அதன் மூலம் இரு தேசங்களிலும் இரு வேறு பல்கலைக் கழகங்களின் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமை அடிகளைச் சேர்ந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையை நெறிப்படுத்தியதனாலும் அவரது பெயர் வரலாற்றில் நிலைக்குமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பன்மொழித் திறமை

விபுலானந்தர் தமிழும் ஆங்கிலமும் மட்டுமன்றிச் சமஸ்கிருதம், சிங்களம், கிரேக்கம், வங்கம் ஆகிய மொழிகளையும் அறிந்திருந்தமையால் இராமகிருஷ்ண மடத்தின் பல பதிப்புக்களையும் சஞ்சிகைகளையும் புலனடக்கத்தின் சிறப்பைக் கூறும் பல கட்டுரைகளையும் பலரும் பாராட்டும் வண்ணம் பதிப்பித்தார். ஆங்கிலத்திலிருந்து சுவாமி விவேகானந்தரின் சில கட்டுரைகள், நோபல் பரிசு பெற்ற தாகூரின் வங்கமொழிக் கட்டுரைகள், கதிரேசன் செட்டியாரின் ஆங்கில சரித்திரக் கட்டுரைகள் ஆகியவற்றை இலகுவான தமிழில் மொழிபெயர்த்து எழுதினார்.

சேக்ஸ்பியரின் பன்னிரண்டு ஆங்கில நாடகங்களின் நாடக அமைப்பையும் யுக்திகளையும் தமிழ் மாணவர் அறிவதற்காக “மதங்கசூளாமணி” என்னும் நாடக நூலை இயற்றினார். அடிகளார் சைவசமயம் சார்ந்த நூல்களுடன் சங்க காலத் தமிழ் நூல்களில் தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். சுப்பிரமணிய பாரதியாரையும் அவரின் படைப்புக்களையும் இலங்கையிலும் இந்தியாவிலும் முதன்மைப்படுத்திய பெருமை சுவாமி விபுலானந்தரைச் சாரும். பௌதீக, விஞ்ஞான அறிவு கொண்ட அடிகளார், அறிவியல் கலைச் சொல் அகர முதலியை முதலில் வெளியிட்ட பெருமை கொண்டவராவார்.

நூலாக்கத் திறமை

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் சேவை செய்தபோது, இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். அத்துடன் நமது முன்னோர் கையாண்ட இசைக் கருவிகளின் இயல்பை ஏறக்குறைய பதினான்கு வருடங்களாக நுணுக்கமாக ஆராய்ந்து கற்றார். இராமகிருஷ்ண மிஷன் இமய மலைப் பகுதியில் உள்ள (Almorah)என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் “பிரபுத்த பாரதம்” (Prabudha Bharadha) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934ம் ஆண்டில் விபுலானந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அங்கிருந்த போதுதான் இசைத் தமிழ் பற்றிய அவரது ஆராய்ச்சி முழுமை பெற்றது. அரிய நூலாகிய “யாழ் நூல்”, “நடராச வடிவம்”, “உமா மகேசுவரம்”, ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள், நான்கு செய்யுள் நூல்கள், ஆகியவற்றுடன் தத்துவங்கள் பொதிந்த கட்டுரைகளையும் ஆக்கம் செய்தார்.

பாராட்டு விழா

யாழ் நூல் அரங்கேற்றம் செய்யப்பட்ட முதல் நாள் விழாவில் புலவர்களும் அறிஞர்களும் சூழ்ந்து வர, சுவாமி அவர்களைத் தெற்குக் கோபுரவாயிலின் வழியாக வில்வாரண்யேசுவரர் திருக் கோவிலிற்கு சான்றோர்கள் அழைத்துச் சென்றார்கள். சுவாமி அவர்கள் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை, சதுர்த்தண்டி வீணை ஆகியவற்;றைத் தாங்கியபடி சிலர் சென்றனர். அந்த நாளில் இடம்பெற்ற விழாவில் அடிகளால் ஆக்கப்பட்ட “ நாச்சியார் நான்மணி மாலை” வித்துவான் ஓளவை துரைச்சாமிப் பிள்ளை அவர்களால் படிக்கப்பட்டு பேரறிஞர்கள் மத்தியில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

சுவாமி விபுலானந்தரை பாராட்ட எடுக்கப்பட்ட இரண்டாம் நாள் விழாவில் சோமசுந்தரப் பாரதியார், தமிழ்ப் பேராசிரியர். தெ. பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை, இசைப் பேராசிரியர் சுவாமிநாதபிள்ளை, சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, கரந்தைக் கவியரசு அ. வெங்கடாசலம் பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், வித்துவான் வெள்ளை வாரணர் போன்ற பல பேரறிஞர்கள் கலந்து கொண்டனர். அவ்வறிஞர்கள் ஆய்வுரையும், சிறப்புரையும் நிகழ்த்தி அடிகளாரை மேலும் சிறப்பித்தனர்.

தேசிய வீரர் கௌரவம்

யாழ் நூலை இந்தியாவில் 1947ம் ஆண்டு அரங்கேற்றிய பின்னர் அடிகளாரின் உடல் நலம் குன்றத் தொடங்கியது. நோய் வாய்ப்பட்ட பின் இலங்கை வந்த சுவாமிகள், சிகிச்சை பலனின்றி அதே வருடம் ஆடித் திங்கள் பத்தொன்பதில் இறைவனடி சேர்ந்தார். அவரின் பூதவுடல் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்றலில் அடக்கம் செய்யப்பட்டது. அடிகளாரின் பேச்சுக்களும் எழுத்துக்களும், அவர் இறந்த பின் “யுnஉநைவெ வுhழரபாவள கழச வாந ஆழனநசn ஆயn” என்ற ஆங்கில நூலாக வெளியிடப்பட்டது. இலங்கை அரசும், ஜெர்மன் நாடும் அவர் ஞாபகார்த்தமாக முத்திரைகள் வெளியிட்டுள்ளன. அடிகளார் ஆற்றிய பணிகளைப் பாராட்டும் முகமாக இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைக் கௌரவித்துள்ளது.