பாடம் 17:பண்டிகைகள்

பண்டிகைகளைக் கொண்டாடாத நாடுகளே உலகில் இல்லை. பண்டிகைகளைக் கொண்டாடுவதால் மக்கள் பூரிப்பு அடைகின்றனர். ஒவ்வொரு மதத்தவரும் தங்களுடைய பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்றாற்போல் தமது பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். தைப்பொங்கல், தீபாவளி, நத்தார், ஹஜ்ஜுப் பெருநாள், புதுவருடப்பிறப்பு, நவராத்திரி, ஆடிப்பிறப்பு என்று பண்டிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.

பண்டிகைக் காலம் வந்ததுமே சிறியோர் முதல் பெரியோர் வரை மகிழ்வாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். பண்டிகை தினத்தன்று தமது சமய வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று கடவுளை வணங்குவது அவர்களது முதற் கடமையாகும். புத்தாடைகள் அணிவதும், விரும்பியவர்களுடைய வீடுகளுக்குச் சென்று வணக்கம் சொல்லி மகிழ்வதும் வழக்கமாகும்.

தைப்பொங்கல்:

தமிழர் திருநாள். உழவர் திருநாள். வீட்டு முற்றத்தில் கோலம் போட்டுப் பொங்கல் செய்யும் நாள். சூரியனுக்கு நன்றி சொல்லும் நாள். சிறுவர்கள் வெடி கொளுத்தி மகிழ்வார்கள். இதற்கு முதல் நாள் போகிப் பண்டிகை. மறுநாள் தோட்டத்தில் மாடுகளுக்கென மாட்டுப் பொங்கல் செய்வார்கள்.

தீபாவளி:

இதனை Festival of Light என்று ஆங்கிலத்தில் மேற்குலக நாடுகளில் கூறுவார்கள். கொடிய அசுரனைக் கொன்றதற்காக வீடுகளில் தீபம் ஏற்றி மகிழும் நாள். சிறுவர்கள் புதிய புதிய ஆடைகள் அணிந்து ஆலயத்திற்குச் சென்று கடவுளை வணங்கி நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று மகிழும் நாள்.

வருடப் பிறப்பு:

ஒவ்வோர் இனத்தவருக்கும் அவர்களது வருடம் பிறக்கும் நாள் வருடப்பிறப்பு ஆகும். தமிழருடைய புதிய வருடம் சித்திரை மாதத்தின் முதல் நாள் வரும். ஆங்கில வருடம் ஜனவரி (January) மாதத்தின் முதல் நாள் வரும். வேறு இனத்தவர்களுடைய புது வருடங்கள் வேறு வேறு நாட்களில் வரும்.

நத்தார்:

இயேசு நாதர் இவ்வுலகிலே அவதரித்த நாள். இந்த நாள் மார்கழி (December) மாதம் 25 ஆம் திகதி ஆகும். உலகில் உள்ள கிறீஸ்தவ மக்கள் எல்லோரும் இந்நாளை மகிழ்வாகக் கொண்டாடுவார்கள். மேற்குலக நாடுகளில் இதற்காக விடுமுறை விட்டு மிகவும் பெரிய அளவில் கொண்டாடுவார்கள். கிறீஸ்தவர் அல்லாத மற்றைய இன மக்களும் இந்த விடுமுறை நாட்களை மகிழ்வாகக் கொண்டாடுவார்கள்.

ஹஜ்ஜுப் பெருநாள்:

இது முஸ்லீம் இன மக்களின் முக்கியமான நாள். இந்நாட்களில் மக்கள் நோன்பு இருப்பார்கள். பலர் புனித நகரமான மெக்காவுக்குப் புனித யாத்திரை செல்வார்கள். அங்குள்ள கஃபா வை ஏழு தரம் வலம் வருவார்கள். ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் பாவங்களிலிருந்து மன்னிக்கப் படுவார்கள் என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது.

முஸ்லீம் பெருநாளன்று அவர்கள் உறவினர், நண்பர் வீடுகளுக்குச் சென்று அன்பளிப்புக்கள் பரிமாறி உபசரித்து மகிழ்வர்.

யூதர்களின் பண்டிகைகள்

வருடத்தில் ஒன்பது பெருநாட்களை பெரும்பாலான யூதர்கள் கடைப்பிடிப்பர். அவை பெரும்பாலும் புரட்டாதி, ஐப்பசி மாதங்களில் வரும். அவற்றில் சிறப்பாக பரிகாரத் திருநாள் (most holy day of the year - Day of atonement) எகிப்திலிருந்து விடுதலை பெற்றதனைக் குறிக்கும். கடப்புத்திருநாள் (Passover) போன்றவை கொண்டாடப்படுகின்றன. தமது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சமயாசாரங்களின்படி விருந்துண்டு மகிழ்வார்கள்.

உலகில் பல இன மக்கள் வாழ்கிறார்கள். பல மதங்களும் இருக்கின்றன. மதங்கள் ஒவ்வொன்றும் மக்களை மகிழ்ச்சியாக வாழவே வழி செய்கின்றது. ஆனால் சிலர் மதங்களை தமது சொந்த நல ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துகின்றார்கள். நாங்கள் வேறு வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக, மகிழ்வுடன் வாழ்வோம்.