ஓர் ஊரிலே பொன்னண்ணா என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் தனது மாமியின் வீட்டிற்குச் சென்றார். அன்று ஆடிப்பிறப்பு நாளாகும். மாமியின் வீட்டில் கொழுக்கட்டை அவித்துக் கொடுத்தார்கள். பொன்னண்ணா முன்னர் ஒருநாளும் கொழுக்கட்டை சாப்பிட்டதில்லை. அவை மிகவும் உருசியாக இருந்தன. கொழுக்கட்டை என்ற பெயரை தனது மனதில் மனப்பாடமாக்கி வைத்திருந்தார். அவர் திரும்பி வரும் வழியெல்லாம் “கொழுக்கட்டை, கொழுக்கட்டை” என்று முணுமுணுத்துக் கொண்டே வந்தார். வழியில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றைக் கடந்ததும் அவர் கொழுக்கட்டை என்ற பெயரை மறந்துவிட்டார். அதற்குப் பதிலாக “ஆத்துக்கட்டை” என்ற பெயர்தான் அவருக்கு மனதிலே வந்தது. வீட்டிற்கு வந்ததும் தனது மனைவியிடம் “ஆத்துக்கட்டை” அவித்துத் தரும்படி கூறினார். பல முறை கூறியும் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. பொன்னண்ணாவிற்குக் கோபம் வந்துவிட்டது. தனது கையிலிருந்த தடியால் மனைவியின் கையில் ஓங்கி ஓர் அடி அடித்துவிட்டார். கையில் அடி பட்டதும் அது வீங்கிவிட்டது. மனைவி பொன்னண்ணாவைப் பார்த்து “நீங்கள் அடித்ததனால் எனது கை கொழுக்கட்டை போல் வீங்கிவிட்டது” என்றார். “அதுதான், அதுதான்…கொழுக்கட்டை, கொழுக்கட்டை” என்று துள்ளிக் குதித்தார் பொன்னண்ணா.
(1). கொழுக்கட்டை எப்படி இருக்கும்?
______________________________________________________
(2). மாமி ஏன் கொழுக்கட்டை அவித்தார்?
______________________________________________________
(3). வழியில் என்ன இருந்தது?
______________________________________________________
(4). கொழுக்கட்டையைப் போலிருக்கும் இன்னொரு பொருளின் பெயர் கூறுக?
______________________________________________________
(5). உமக்குப் பிடித்த ஐந்து சிற்றுண்டிகளின் பெயர்களை எழுதுக.
______________________________________________________
(6). விரதம் இருக்கும் ஒரு பண்டிகை தினத்தை எழுதுக.
______________________________________________________
(7). நோன்பு இருக்கும் பண்டிகையின் பெயர் என்ன?
______________________________________________________
(8). எல்லோருக்கும் பொதுவான பெயர் கொண்ட பண்டிகை எது?
______________________________________________________
(9). இயேசுநாதர் எப்போது அவதரித்தார்?
______________________________________________________
(10). உமக்கு விருப்பமான பண்டிகை எது?
______________________________________________________