நூலகம் ஒரு புத்தகக் களஞ்சியம். இன்று நகரங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடசாலைகளிலும் நூலகங்கள் உண்டு. ஒரு நூலகத்தில் பெரும்பாலும் பல பிரிவுகள் இருக்கும். தினசரிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பகுதி, சிறுவர் புத்தகப்பிரிவு, உசாவியல் நூல்கள், துணை நூல்கள் கொண்ட பிரிவு, பிறபொதுவான நூல்கள் அடங்கிய பிரிவு போல்வன உண்டு. இப்பிரிவுகளில் புனைகதை, அறிவியல், பொருளியல், அரசியல், புவியியல், சுயசரிதை, சமயம், கவின்கலைகள் போன்ற பல பிரிவுகளுக்குரிய நூல்கள் எண்ணிடப்பட்டுச் சீராகப் புத்தக நிலையத் தட்டுகளில் அடுக்கப்பட்டிருக்கும். இன்றைய நூலகங்களில் கணினிப் பிரயோகப் பகுதி, ஒளி ஒலி வட்டுக்கள் கொண்ட பகுதிகளையும் காணலாம்.
நூலகத்துள் எப்பொழுதும் அமைதி நிலவும், நூலகத்தைப் பயன்படுத்துவோர் அங்கு தாங்கள் விரும்பிய பத்திரிகைகளையோ நூல்களையோ எடுத்துத் தனிமையாய், தொல்லையின்றி வாசிக்க முடியும்.
இன்று பல மொழிகளில் புத்தகங்கள் ஏராளமாக வெளிவருகின்றன. ஒருதனி நபர் எல்லா நூல்களையும் வாங்க முடியாது; ஆனால், நூலகங்களில் அவரவர் விரும்பும் பல நூல்கள் உண்டு. அவற்றைப் பெற்றுப் பயன்படுத்திய பின் மீளக் கொடுக்கலாம்.
நூலகத்தை நிர்வகிக்க நூலகப் பொறுப்புநர், உதவியாளர்கள் இருப்பர். இவர்களே புத்தகங்களை வருவித்து அவற்றிற்குரிய இடங்களில் அடுக்குவர். புத்தகங்களை இரவல் கொடுப்பதும் மீளப்பெறுவதும் இவர்களே ஆகும். எங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தேடித் தருவதிலும் இவர்கள் உதவுவார்கள்.
இன்றைய நூலகங்களில் பிற வசதிகளும் உண்டு. சிறுவர்களை வாசிக்கத் தூண்டுவதற்கு வாசித்தல் கதை சொல்லல் நிகழ்வுகள் உண்டு. வளர்ந்தவர்களுக்கு கேட்போர் கூடத்தில் பேச்சு, கலந்துரையாடல், கலை, ஆவணம் சம்பந்தமான திரைப்படங்கள் போன்றவற்றைப் பார்க்கும் வசதிகள் உண்டு. கற்றல் என்பது பள்ளிக்கூட வாழ்க்கையுடன் முடிவதில்லை. எனவே அறிவை மேலும் மேலும் வளர்க்க நூலகங்கள் அவசியமாகும். அதனாற் போலும் அறிவுக்குத் ~~தேடல்|| என்ற சொல்லுளது.
மாணவர்களுக்கு தங்கள் ஒப்படைக்குத் தேவையான விடயங்களைத் தேடிப் பெறவும் தங்கள் வாசிப்பு ஆற்றலை விருத்தி செய்யவும் நூலகங்கள் உதவுகின்றன. முதியோர்களுக்கு வயது சென்ற காலத்தில் வாசித்துப் பொழுதுபோக்கும் நிலையங்களாகவும் நூலகங்கள் உதவுகின்றன.
புராதன காலங்களில் பபிலோனியா, மெசப்பத்தோமியா, சீனா, இந்தியா, எகிப்து போன்ற நாடுகளிலும் அலக்சாந்திரியா, ஏதன்ஸ், உரோம் போன்ற நகரங்களிலும் பிரசித்தி பெற்ற நூலகங்கள் இருந்ததாக வரலாறுகள் உண்டு. 1800ம் ஆண்டு வாஷிங்டனில் நிறுவப்பட்ட நூலகத்தில் பதினெட்டு மில்லியனுக்கு மேலான நூல்களும் நூறு மில்லியனுக்கு மேலான அரும் பொருட்களும் உள்ளன. இதுவே உலகில் மிகப்பெரிய நூலகம் ஆகும்.
தமிழ் முதுமொழிகளில் ~கண்டது கற்கப் பண்டிதனாவான்!, 'ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்', 'நூல் பல கல்' போன்ற கல்விக் கூற்றுக்கள் உண்டு. இவற்றை நாம் கைக்கொள்ள நூலகங்கள் பெரிதும் உதவுகின்றன அல்லவா?