கவி நயமும் கற்பனை வளமும் மிக்க நளவெண்பா எனும் நூலை ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர், தொண்டை நாட்டில் பிறந்த புகழேந்தி எனும் புலவர் ஆக்கினார். நான்கு வரிகளாலான வெண்பா மூலம், பல் சுவை மிக்க வரலாற்றினைக் கண் முன் கொண்டு வரும் புகழேந்திப் புலவரின் கவித்திறன் ஒப்பற்றது. இந்நூல் சுயம்வர காண்டம், கலி தொடர் காண்டம். கலி நீங்கு காண்டம் என மூன்று பகுதிகளைக் கொண்டு விளங்குகின்றது. சந்திரன் சுவர்க்கி என்ற மன்னனின் வேண்டுதலால் பாடப்பட்ட இந் நூல் நளன் எனும் ஒரு மன்னனின் கதையைக் கூறுகின்றது.
மாவிந்த நகரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த நிடத நாட்டை சந்திரகுலத்தைச் சேர்ந்த நளன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். ஒருநாள் அவன் நந்தவனத்தில் உலவிக் கொண்டிருந்தபோது பேசும் வல்லமை கொண்ட ஒரு அழகிய அன்னப் பறவையைக் கண்டான். அது “விதர்ப்ப நாட்டு இளவரசியாகிய தமயந்தியே உனக்கு ஏற்ற மனைவி ஆவாள்” எனக் கூறி அவளின் குணநலன்களை விளக்கிக் கூறியது. அன்னப் பறவை கூறிய சிறப்புக்களைக் கேட்ட மன்னன், தன் மனதைத் தமயந்தியிடம் பறிகொடுத்தான்.
மன்னனின் மனதில் தமயந்தியின் நினைவைப் பதித்த பின்னர் அன்னப் பறவை தமயந்தியிடம் பறந்து சென்று நளமகாராசனின் சிறப்பியல்புகளைக் கூறியது. அவனது நற்குணம், வீரம் போன்ற பண்புகளைச் செவியுற்ற தமயந்தியும் நளன் மீது நாட்டம் கொண்டாள். விதர்ப்ப நாட்டு அரசனாகிய வீமராசன், தனது மகள் தமயந்தியின் மனநிலை அறிந்து அவளின் திருமணத்திற்காக சுயம்வரம் நடாத்த ஏற்பாடு செய்தான்.
பலநாட்டு அரசர்களும் கூடி இருக்கும் மணமண்டபத்தில் மணமகள் தனக்கு விருப்பமானவரின் கழுத்தில் மாலை இட்டு தனது மணாளனைத் தெரிவு செய்வது அக்காலத்து மரபாகும். அதன்படி வீமராசன் தனது மகளின் சுயம்வரத்தினை அண்டை நாட்டு மன்னர் யாவருக்கும் அறிவித்தான். சுயம்வரச் செய்தி அறிந்ததும் மண்ணாளும் மன்னர்கள் மட்டும் அன்றி, விண்ணவர்களும் தமயந்தியை அடைய விரும்பினர். அவர்களில் பலர் நளனைப் போலவே தமது உருவங்களை மாற்றிக் கொண்டு ஆவலுடன் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர்.
“மன்னர் விழித் தாமரை பூத்த மண்டபத்தே பொன்னின் மடப்பாவை போய்ப் புக்காள் - மின்னிறத்துச் செய்யதாள் வெள்ளைச் சிறை அன்னம் செங்கமலப் பொய்கைவாய்ப் - போவதே போன்று”
சுயம்வர மண்டபத்தில் நளனைப் போலவே பலர் வீற்றிருந்ததைக் கண்டு தமயந்தி திகைப்புக் கொண்டாள். இருப்பினும் அவள் தனது மதி நுட்பத்தினால் விண்ணவர்களின் கால்கள் நிலத்தில் படாமலும், கண்கள் இமைக்காமலும் இருப்பதனை அவதானித்து, உண்மையான நளனைத் தேடி அறிந்து கொண்டாள். அவன் கழுத்தில் தமயந்தி மாலை இடவே இருவருக்கும் திருமணம் இனிது நடந்தது. தேவர்கள் தமயந்தியை அடைய முடியாது போனதால் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால்; கலி என்பவன் சினம் கொண்டு நளனுக்கும் தமயந்திக்கும் துன்பம் செய்வேன் என்று சபதம் செய்து அதற்குரிய தருணம் பார்த்திருந்தான்.
நளனும் தமயந்தியும் இனிது இல்லறம் நடாத்தி இந்திரசேனன் என ஒரு புதல்வனையும் இந்திரசேனை என ஒரு புதல்வியையும் பெற்றனர். நளன் நீதிநெறி தவறாது நல் ஒழுக்கத்துடன் அரசாண்டு வந்தமையால் கலியால் அவனுக்கு எதுவித துன்பமும் செய்ய முடியவில்லை. பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தபின் ஒருநாள் நளன் தனது கால்களைச் சரிவரக் கழுவாது பூசை செய்யப் புகுந்ததைக் கண்ட கலி, அவனைப் பிடித்துக் கொண்டு அவனது வாழ்வுடன் விளையாட ஆரம்பித்தான்.
கலியின் தூண்டுதலால் நெய்தல் நாட்டவனான புட்கரன் என்பவன் நளமகராசனின் அரசைக் கவரும் எண்ணம் கொண்டு நளனைத் தன்னுடன் சூதாட வருமாறு அழைத்தான். நளனுடைய அமைச்சர்கள் சூதாடுதல் கேடு தரும் என அறிவுரை கூறினார்கள்.
“காதல், கவறு ஆடல் கள்ளுண்டல் பொய்ம்மொழிதல் ஈதல் மறுத்தல் இவை கண்டாய் - போதில் சினையாமை வைகும் திருநாடா! செம்மை நினையாமை பூண்டார் நெறி! அறத்தை வேர் கல்லும் அருநரகில் சேர்க்கும்: திறத்தையே கொண்டருளைத் தேய்க்கும் - மறத்தையே பூண்டு விரோதம் செய்யும்: பொய்ச்சூதை மிக்கோர்கள் தீண்டுவரோ என்றார் தெரிந்து.”
விதியின் வலிமையால் நளன் அறிவு மயங்கிஇ சூதாட்டத்தில் தனது நாடுஇ நகரம்இ செல்வம் யாவற்றையும் இழந்தான். அதனால் அவன் தனது நாட்டை விட்டு நீங்கிஇ மனைவி மக்களுடன் காட்டுக்குப் போக நேரிட்டது. குழந்தைகள் காட்டில் இருப்பதனைப் பொறுக்காத தமயந்தி குழந்தைகளைத் தனது தந்தையின் நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி வேண்டினாள். அவ்வாறே விதர்ப்ப நாட்டிற்குச் சென்று தமயந்தியின் தந்தையுடன் வாழும்படிஇ நளன் ஒரு அந்தணனுடன் தனது பிள்ளைகளை அனுப்பினான்.
அடர்ந்த காட்டில் நளனும் தமயந்தியும் தொடர்ந்து பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிட்டது. அவர்கள் அறியாது கலி அழகிய பறவை உருவில் வந்தது. அதனைக் கண்ட தமயந்தி அப் பொன்னிறப் பறவையைப் பிடித்துத் தரும்படி நளனிடம் வேண்டினாள். அவளின் விருப்பப்படி ஆடையால் வீசிப் பறவையை பிடிக்க முயன்று நளன் ஆடையை இழந்தான். கலி அவர்களின் உடையைக் கவர்ந்து இருவரையும் பாதி உடையுடன் கானகத்தில் அலைய வைத்தான். கலியின் பாதிப்பினால் சிந்தை தடுமாறிய நளன், காரிருளில் தமயந்தியை, கானகத்தே தனியே விட்டுப் பிரிந்தான். தனித்து விடப்பட்ட தமயந்தி ஒரு கொடிய பாம்பின் வாயில் அகப்பட்டு அலறினாள். அவளது அழுகுரல் கேட்டு வந்த வேடனொருவன், அவளைப் பாம்பிடம் இருந்து காப்பாற்றினான். அதன் பின்னர் அவ்வழியால் சென்ற ஒரு வணிகன் மூலம் வழி அறிந்து தமயந்தி சேதி நகரம் சென்றாள். அங்கிருந்து தனது தந்தை ஆளும் விதர்ப்ப நாடு போய்த் தனது பிள்ளைகளைக் கண்டு ஆறுதல் கொண்டு பெற்றோரின் அரண்மனையில் வாழத் தலைப்பட்டாள்.
தன் மனைவியைப் பிரிந்து தனியனாக நளன் காட்டு வழியே நடந்து கொண்டிருந்த போது கார்கோடன் எனும் ஒரு பாம்பை கொடிய தீயில் இருந்து காப்பாற்ற முயன்றான். அப்போது பாம்பு அவனைத் தீண்டியதால் அதன் கொடிய விடம் அவனது சுய உருவத்தினை மாற்றியது. இருப்பினும் தனக்கு உதவி செய்தமையால் நளன் விரும்பும் போது மீளவும் சுய உருவத்தினைப் பெறும் பொருட்டு கார்கோடன் ஒரு பொன்னாடையை நளனுக்கு வழங்கியது. அதன் பின்னர் காட்டை விட்டு நளன் அயோத்தி நகரம் சென்றடைந்தான். அயோத்தி மன்னன் இருதுபன்னனிடம், வாகுகன் எனும் பெயரில், உருமாறிய நளன் மன்னனின் தேர் ஓட்டியாக வாழ்ந்து வந்தான்.
விதர்ப்ப நாட்டின் மன்னன் வீமராசன் நளனைத் தேடிக் கண்டறியும் பொருட்டுத் தமயந்திக்கு மீளவும் சுயம்வரம் நடத்தப் போவதாக முரசு அறைவித்தான். இதனை அறிந்த அயோத்தி மன்னன் இருதுபன்னன், தனது தேரோட்டியாக வாகுகன் எனும் பெயரில் இருந்த நளனை அழைத்துக் கொண்டு விதர்ப்ப நாடு சென்றான். வேறு உருவத்துடன் அங்கு சென்ற நளன் தனது பிள்ளைகளையும் மனைவியையும் கண்டு மகிழ்ந்தான். மாற்று உருவை களைந்து தன்னை வெளிப்படுத்தும் பொருட்டு கார்கோடன் முன்னர் காட்டில் கொடுத்த உடையை அணிந்ததும் சுய உருவம் கொண்டு, நளன் தனது மனைவி மக்களுடன் ஒன்று சேர்ந்தான்.
வாகுகன் எனும் பெயரில் அயோத்தி மன்னனின் தேரோட்டியாக வந்தது நளமகாராசனே என்பதனை அறிந்து யாவரும் மகிழ்ந்தனர். தேவர்கள் பூமாரி சொரிய கலி பகவானும் மனம் கனிந்து நளன் முன் தோன்றி உனக்கு வேண்டிய வரத்தினைக் கேள் என்றான். தனது கதையினைக் கேட்பவர்களைத் துன்புறுத்தல் ஆகாது என நளன் வேண்டினான். “அவ்வாறே ஆகுக” என்று கூறிய கலி பகவான் மேலும் பல வரங்களை அளித்தான். கலி நீங்கிய பின்னர் நளன் புட்கரனை வென்று தனது நாட்டையும் சகல செல்வங்களையும் மீண்டும் பெற்றான். பல திசைகளிலும் இருந்து வந்த மன்னர்கள் பாராட்ட, படைகள் புடை சூழத் தேர் மேல் ஏறித் தமயந்தியுடன் மாவிந்த நகரத்துக்குச் சென்றான்.
கார்பெற்ற தோகையோ! கண்பெற்ற வாள்முகமோ! நீர்பெற்று உயர்ந்த நிறை புலமோ! – பார்பெற்று மாதொடு மன்னன் வரக்கண்ட மாநகருக்கு ஏதோ உரைப்பன் எதிர்!
(கருத்து – மன்னன், மனைவி மக்களுடன் மாநகரத்துள் நுழையும் போது நகர மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடாக மழை மேகத்தைக் கண்ட மயிலையோ அல்லது ஒளி வீசும் கண்களைக் கொண்ட அழகிய முகத்தையோ அல்லது நீரால் செழித்த நெல் விளைந்த நிலத்தையோ – எதை நான் சொல்;ல முடியும். இவற்றில் எதுவும் இணையாக மாட்டாது)
இப் பாடல் மூலம் மாவிந்த நகரத்து மக்கள் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தனர் எனும் செய்தியைப் புகழேந்திப் புலவர் மிகவும் நயத்துடன் கூறுகின்றார். கற்பனை வளமும் சொல் அழகும் மிகுந்த வெண்பாக்கள் பாடும் திறன் கொண்டமையால் வெண்பாவில் புகழேந்தி என்று யாவராலும் போற்றப்படுகின்றார்.