பாடம் 21:எல்லோரும் அறிந்த எலி

உலகில் உள்ள எல்லோருக்கும் ஓர் எலியை நன்றாகத் தெரியும். அது ஒரு சுண்டெலி. உண்மையில் அதற்கு உயிர் இல்லை. அது ஒரு சித்திரம். அதற்கு ஓர் அழகான பெயரும் உள்ளது. இப்போது கண்டுபிடித்து விட்டீர்களா? அதுதான் “மிக்கி மவுஸ்”. “மிக்கி மவுஸ்”; ஒரு கேலிச்சித்திரம். “வோல்ட் டிஸ்னி” என்ற ஓவியர் வரைந்தது.

“வோல்ட் டிஸ்னி” 1901 ஆம் ஆண்டு, டிசெம்பர் மாதம், 5ஆம் திகதி அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ நகரில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் “எலியாஸ் டிஸ்னி”. டிஸ்னிக்கு சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் அதிகமான விருப்பம். அவருக்குப் பிராணிகள் மீதும் அளவற்ற அன்பு. அணில், நாய், வாத்து போன்ற பிராணிகளுடன் செல்லமாகப் பேசிக்கொண்டிருப்பார்.

இவர் பெரியவர் ஆனதும் கேலிச்சித்திரப் படங்களை உருவாக்கினார். இவர் விரும்பும் அணில், வாத்து, நாய் போன்ற பிராணிகளே கேலிச்சித்திரப் படங்களின் கதாபாத்திரங்கள். பின்னர் அணிலுக்குப் பதிலாக ஒரு சுண்டெலி பாத்திரத்தை அறிமுகம் செய்தார். சுட்டித்தனமும் சுறுசுறுப்பும் கொண்ட சுண்டெலியே “மிக்கி மவுஸ்.”

“வோல்ட் டிஸ்னியின்” “மிக்கி மவுஸ்” நடித்த முதலாவது படம் ~ஸ்டீம் போட் வில்லி| ஆகும். இது 1928 ஆம் ஆண்டு திரையில் காண்பிக்கப்பட்டது. இதுவே முதலாவது பேசும் கேலிச்சித்திரப் படமாகும். இந்தப் படம் காண்பிக்கப்பட்ட பின்னர் கேலிச்சித்திரப் படங்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டது.

“வோல்ட் டிஸ்னி” பல கேலிச்சித்திரக் கதாபாத்திரங்களை உருவாக்கினார். அவற்றில் “மிக்கி மவுஸ்” அதிகப் புகழ் பெற்றது. “மிக்கி மவுஸ்” புகழ் பெற்றதன் காரணமாக சிறுவர் விளையாட்டுப் பொருள்கள் பல அதன் வடிவத்தில் செய்யப்பட்டன. சிறுவர்களின் உடைகளில் “மிக்கி மவுசின்” படம் அச்சுப் பதிக்கப்பட்டது. “மிக்கி மவுசின்” உருவத்துடன் வாழ்த்து மடல்கள் உருவாகின.

டிஸ்னியின் கற்பனைக் கதாபாத்திரங்களில் டொனால்ட் டக், மினி, கூவ்வி, பம்பி, சிம்பா போன்றவை பிரசித்தி பெற்றவை. சிறுவர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் விரும்பி இரசிக்கும் வண்ணம் அவர் பல இயங்கு படங்களை வெளியிட்டார். வால்ட் டிஸ்னி 1966ம் ஆண்டு இறந்த போதும் அவரது திட்டப்படி ஆரம்பிக்கப்பட்ட வால்ட் டிஸ்னி உலக உல்லாச நகரம் ப்ளோரிடாவில் இயங்குகின்றது. டிஸ்னிலான்ட் என்ற பெயரில் தற்போது பிரான்ஸ், ஜப்பான், ஹாங்காங் போன்ற நாடுகளில் பொழுதுபோக்கும் மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உலகமெங்குமுள்ள சிறுவர்களின் மனங்களில் நீங்கா இடம்பெறும் மிக்கி மவுஸ் யாவரது மனங்களையும் களிப்பூட்டும் கேலிச்சித்திரக் கதாபாத்திரம் ஆகும்.