பாடம் 1 : வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் (Fr. Constan! ne Joseph Beschi) இத்தாலியில் பிறந்து ரோமாபுரியில் கல்வி பயின்றார்.யேசு சபையில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றபின் தனது அகவை முப்பதில், சமய சேவை செய்வதற்காக 1710ல் மதுரை வந்தார். இவர் சைவ மதத் துறவிகளைப் போல் உடை உடுத்து, சைவ உணவு உண்டு வாழ்ந்தார். இவர் இலத்தீன், பிரஞ்சு, இத்தாலி, ஹீப்ரு ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். இவர் தமிழ் மொழியை நன்கு கற்றுத் தமிழில் செய்யுளிலும் உரை நடையிலும் நூல் எழுதும் வல்லமை பெற்றார்.தனது பெயரை தைரியநாதன் என முதலில் மாற்றி, பின்னர் அதீத தமிழ்ப் பற்றின் காரணமாக வீரமாமுனிவர் என்ற பெயரைச் சூடிக் கொண்டார்.

அக் காலத்திலே, காகிதத்தில் எழுதும் முறையும் அச்சிடும் முறையும் மேல் நாடுகளில் அறிமுகப் படுத்தப்பட்ட போது, தமிழ் நூல்கள் ஓலைச் சுவடிகளிலேயே எழுதிப் பாதுகாக்கப்பட்டு வந்தன. தமிழில் நூல்களை இலகுவாக எழுதவும், அச்சிடவும் விரும்பிய வீரமாமுனிவர், தமிழ் எழுத்துக்களில் சில திருத்தங்கள் செய்தார். பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்களில் எகர, ஒகரங்களில் குறில் நெடில் எழுத்துக்களின் வேறுபாடுகளை அறிவதற்கு, எளிமையான குறிவேறுபாடுகள் இருக்கவில்லை. எகர, ஒகர குறில் எழுத்துக்களுக்கு மேல் புள்ளி வைத்தும், ஏகார, ஓகார நெடில் எழுத்துக்களுக்கு மேல் புள்ளி வையாமலும் கெ, கெ, கொ, கொ என எழுதப்பட்டன. வீரமாமுனிவர் குறில் எழுத்துக்கு ஒற்றைக் கொம்பு சேர்த்தும் நெடில் எழுத்துக்கு இரட்டைக் கொம்பு சேர்த்தும், கெ, கே,கொ, கோ என்று எழுதும் முறையை அறிமுகப்படுத்தினர்.

சமயத் தொண்டு செய்ய வந்த வீரமாமுனிவர் ஆற்றிய தமிழ் தொண்டின் பெருமையை, அவர் ஆக்கிய செய்யுள் நூல்களும், உரைநடை நூல்களும், கத்தோலிக்க சமய நூல்களும் பறை சாற்றுகின்றன. வீரமாமுனிவர் பல நூல்களை எழுதினர். தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, கலிவெண்பா, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரி அம்மன் அம்மானை, வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், வாமன் கதை. பரமார்த்த குரு கதை, தொன்னூல் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூல்களை வசன வடிவிலும் எழுதினார். அகராதி எழுதும் மேலை நாட்டு முறையைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவரும் வீரமாமுனிவரே. அவர் எழுதிய சதுரகராதி, தமிழில் முதல் முதலாக எழுதப்பட்ட அகரமுதலியாகும். அகரமுதலி எழுதப்படமுன் ஒரு சொல்லுக்குப் பொருள் அறிவதென்றால், செய்யுள் வடிவில் இருந்த திவாகரம், நிகண்டு நூல்களைக் கற்றவர்களை நாட வேண்டியிருந்தது. அகரமுதலியின் அறிமுகத்தால் பாமரர்களும் இலகுவாகப் பழம் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைக் கற்க முடிந்தது.

தமிழ் மொழியின் சிறப்பினை விளக்கும் பொருட்டு, தமது தொன்னூல் என்னும் நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்து இலக்கணங்களைத் தொகுத்து வீரமாமுனிவர் வெளியிட்டார். இலத்தீனில் மொழி பெயர்க்கப்பட்ட இந்நூலின் சிறப்பினைப் போற்றி, அதனைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் கூறுவார்கள். திருக்குறளின் அறத்துப் பாலையும், பொருட் பாலையும் இலத்தீனில் மொழி பெயர்த்தார். அவரது பல நூல்கள் கன்னடத்திலும் தெலுங்கிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. கிறீத்தவ மதத்தின் சிறப்பினை யாவரும் அறியும்படி அவரால் தேம்பாவணி என்னும் காப்பியம் இயேசு நாதரின் வாழ்வுடன் சேர்ந்த கதைகளுடன் எழுதப்பட்டது. அந்நூலானது பழம் தமிழ் காப்பியங்களின் மரபினைப் பின் பற்றி 3615 விருத்தப் பாடல்களால் நாட்டுவளம், நகர் வளம் யாவும் தமிழ் நாட்டு வர்ணனைகளுடன் ஆக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு மொழியில் இருந்து தழுவி எழுதப்பட்ட பரமார்த்தகுரு கதை, தமிழில் எழுந்த முதல் நகைச் சுவை இலக்கியம் என்ற பெருமை பெறுகின்றது.

தமிழ் வளர்த்த மேலை நாட்டு அறிஞர்களுள் தத்துவ போதக சுவாமி, சீகன் பால்கு, இரேனியஸ், கால்டுவெல் அய்யர், போப் அய்யர், பேர்சிவல் பாதிரியார், வின்ஸ்லோ பாதிரியார், பேராசிரியர் சுவலபில் போன்ற பல அறிஞர் பெருமக்கள் வரிசையில், தமிழில் எழுத்துக்களைச் செப்பனிட்ட வீரமாமுனிவர் சாகாவரம் பெற்றுத் திகழ்கின்றார்.