அல்பிறெட் பேர்னார்ட் நோபல் (Alfred Bernhard Nobel) சுவீடன் தேசத்தில் ஸ்ரோக்கோம் நகரில், 1833ம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தையின் வேலை நிமித்தம் ரஷ்யாவில் இளம் வயதில் வாழ்ந்த போதிலும் பின்னர் பாரிஸ் நகரத்தில் வேதியல் (chemistry) கல்வி பயின்றார். 1859ம் ஆண்டு சுவீடன் நாட்டிற்கு திரும்பிய பின் பொறியியலாளராகவும், வேதியியலாளராகவும் பணி புரிந்து அனுபவம் மிக்க நிறுவன உரிமையாளராக முன்னேறினார். இளமைக் காலம் முதலாக கடின உழைப்புக் கொண்ட நோபல், புதிய விடயங்களைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
அக்காலகட்டத்தில் உலக நாடுகளிடையே போக்குவரத்துத் தொடர்புகள் பெருக ஆரம்பித்தமையால் பாதைகளின் தேவை மிகவும் அவசியமானதாகக் கருதப்பட்டது. அவரது திட்டங்களில் அகன்ற பாதை அமைக்கும் போது குறுக்கிடும் மலைகளை உடைப்பது மிகக் கடினமாக இருந்தமையால், வெடி பொருட்களை உபயோகித்துக் கற்பாறைகளை உடைக்க முடியுமா என்று ஆராய்ந்தார். இதன் பயனாகத் தகர் வெடி அல்லது, டைனமைற் (dynamite) எனப்படும் வெடியைக் கண்டுபிடித்தார். இதன் உபயோகத்தால் மலைகளைத் தகர்த்துப் பாதைகள் அமைப்பது, கட்டிடங்களுக்கு அத்திவாரம் தோண்டுவது, சுரங்கங்கள் அகழ்வது, கிணறுகள் தோண்டுவது போன்ற பல வேலைகளை விரைவாகவும் குறைந்த பணச் செலவுடனும், செய்யக் கூடியதாக இருந்தது.
நோபல் டைனமைற் விற்பனை செய்து, பல கோடி செல்வத்தைச் சம்பாதித்தார். டைனமைற் யுத்தகாலங்களில் குண்டுகள் தயாரிப்பதிலும் பயன்படுத்தப்பட்டது. ஆக்கபூர்வமான முயற்சிகளில், நன்மைக்கு உபயோகிக்கப்பட்ட டைனமைற், தீமை பயக்கும் வழிகளிலும் உபயோகிக்கப்பட்டதனால் அதன் தேவை பெருகிக் கொண்டே போனது. ராசன், தனது மகள் தமயந்தியின் மனநிலை அறிந்து அவளின் திருமணத்திற்காக சுயம்வரம் நடாத்த ஏற்பாடு செய்தான்.இவர் பல்வேறு புதிய நவீன கண்டுபிடிப்புக்களையும் மக்களின் பாவனைக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். அவர் தன் அயராத முயற்சியினால் தமது வாழ்நாளில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட காப்புரிமைப் பட்டயங்கள் (patents) பெற்றிருந்தார்.
ஒருநாள் அல்பிறெட் நோபலின் சகோதரர் எதிர் பாராத ஒரு விபத்தினால் இறந்துபோனார். பத்திரிகைகள் எல்லாம் தவறுதலாக, அல்பிறெட் நோபல் இறந்ததாகச் செய்திகளைப் பிரசுரித்தன. இறந்த நோபலின் சகோதரரின் விபரங்கட்குப் பதிலாக, அல்பிறெட் நோபலின் வாழ்க்கை வளர்ச்சியின் கதையை எழுதின. மேலும் சில பத்திரிகைகள், அவரின் கண்டுபிடிப்புக்கள், மனித சமுதாயத்துக்குச் செய்யும் தீய விளைவுகளை மாத்திரம் எடுத்துக்காட்டி, அவரை ஒரு சமூக விரோதியாகச் சித்தரித்தன. அவரை “ மரணத்தின் வியாபாரி” எனத் தாழ்த்திக் கட்டுரைகள் வரைந்தன. அல்பிறெட் நோபல், எதிர்பாராமல் நிகழ்ந்த இந்தத் தவறான நிகழ்ச்சியால், தன்னைப்பற்றி மக்கள் கொண்டிருந்த தாழ்வான எண்ணங்களை அறிந்தார். மனக்கவலை கொள்ள வைத்த இந்த நிகழ்ச்சி அவரை மனிதநேய அடிப்படையில் சிந்திக்க வைத்தது.
தன் கண்டுபிடிப்பால் மக்களுக்கு ஏற்பட்ட தீமைகட்கு ஈடுசெய்ய வேண்டும் என எண்ணினார். தமது எண்ணத்தை நிறைவேற்ற பொது மக்களின் நன்மைக்காகப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிடத் திட்டமிட்டார். அதன்படியே அவர் செய்த மிகப் பெரிய கொடை, நோபல் பரிசுத் திட்டம் எனப்படுகின்றது. அவர் தனது சொத்தில் பல கோடிப் பணத்தை ஒரு நிதியத்தில் இட்டு, அதன் வருமானத்தை, உலக மக்களுக்கு நன்மை தரும் வழியில் சேவை செய்தவர்களைப் பாராட்டிச் சன்மானம் வழங்கும் படி ஒழுங்கு செய்தார்.
நோபல் பரிசுத் திட்டத்தின் நிதியையும், அதன் நிர்வாகத்தினையும் 1900ம் ஆண்டு நிறுவப்பட்ட நோபல் அறக்கட்டளை, சுவீடனில் ஸ்ரொக்கோமைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. ஒவ்வொரு வருடமும், 1901ம் ஆண்டு முதல் நோபல் நினைவுத் தினமான டிசம்பர் 10ம் நாள் பரிசில்கள் வழங்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு, நோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோ நகரிலும், மற்றைய பரிசுகள் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்கோமிலும் வழங்கப்படுகின்றன. பொருளியல், வேதியியல், இயற்பியல், (Physics) மருத்துவம், உடலியங்கியல் (Human physiology), இலக்கியம், சமாதானம், முதலிய துறைகளில் மிகத் திறமையான சேவையைப் பாராட்டி நோபல் பரிசில்கள் வழங்கப்படுகின்றன.
இந்தியர்களில் முதலாவதாக ரபீந்திரநாத் தாகூர் 1913 ல் இலக்கியத்துக்கான பரிசினைப் பெற்றார். பின்னர் 1930ல் இயற்பியலுக்காக சி.வி. இராமன், சமாதானத்திற்காக 1979ல் அன்னை தெரேசா,1998ல் பொருளியலுக்காக அமர்த்திய சென், 2009இல் வேதியலுக்காக வெங்கட்ராமன் ராமக்கிருஸ்ணன் என்பவர்களுக்கும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. அல்பிரட் நோபலை பெருமைப்படுத்து முகமாக, 1958ம் ஆண்டு கண்டறியப்பட்ட வேதியியல் தனிமத்திற்கு நோபிலியம் (Nobelium) எனப் பெயர் சூட்டி உள்ளார்கள்.
பொதுநலம் கொண்ட அல்பிறெட் நோபல் அக்கால மாந்தர்களில் ஒரு பெரும் வள்ளல் ஆக வாழ்ந்து காட்டி உள்ளார். அவர் மறைந்த பின்னரும் அவரது உன்னதமான கொடை தொடர்ந்து வாழ்கின்றது. தாம் வாழுங்காலத்தில் ஒருவர் முதலில் தனது வாழ்வின் உயர்ச்சிக்காக உழைப்பதுடன் தன் குடும்பத்துக்கும், உறவினருக்கும் உதவிடல் நன்று. அத்துடன் இயன்ற அளவு நாட்டிற்கும் மனித சமுதாயத்திற்கும் பயன் உடையராதல் உன்னதமான செயல் என்பதனை அவரது வாழ்வில் இருந்து, நாம் அறிய முடிகின்றது. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் அறியப்படும் என்ற திருவள்ளுவரின் வாக்குக்கு நோபல் அவர்களின் வாழ்வு ஓர் அரிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.