பாடம் 4: பாரதிதாசனின் இன்பத்தமிழ்

பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1891ல் புதுவையில் பிறந்த இவர் மகாகவி பாரதியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, தமக்கு பாரதிதாசன் என்ற புனைப்பெயரை வைத்துக்கொண்டார். சிறு வயதிலேயே நல்ல கருத்துக்களை அமைத்து சிறு சிறு பாடல்களைப் பாடும் திறமை கொண்டு விளங்கினார். தமது ஆரம்பக் கல்வியை பிரெஞ்சுக் கல்லூரியில் பெற்றாலும் அவர் ஆர்வத்துடன் தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். அவரது திறமையினால் பதினெட்டு வயதிலேயே அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக நியமிக்கப்பட்டார். காலம் சென்ற அறிஞர் அண்ணாத்துரை அவர்களால் புரட்சிக் கவிஞர் எனப் பட்டம் சூட்டப்பட்டுப் போற்றப்பட்டார். அக்கால அரசியலில் ஈடுபட்டுப் புதுவைச் சட்டமன்ற அவைத் தலைவராகவும் கடமை ஆற்றினார்.‘குயில்’ எனும் இதழின் ஆசிரியராகவும், திரைப்படத் துறையில் பங்காற்றியவராகவும் பல திறமைகள் உடையவராக விளங்கினார்.

சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்ட தந்தை பெரியாரின் திராவிட இயக்கத்தில், ஆரம்ப காலம் தொட்டு தீவிர ஈடுபாடு கொண்டார். தமது கவிதைகள் மூலம் மூட நம்பிக்கைகளை எள்ளி நகையாடினார். கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு போன்ற கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு முன் நின்று உழைத்தார். '‘புதியதோர் உலகம் செய்வோம், கொடும் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’' என்ற அவரது கவிதை வரிகள் சாகா வரம் பெற்றவை. அவர் தமது “இந்தியா” என்ற இதழை மறைமுகமாகப் பதிப்பித்ததுடன், புதுவை முரசு எனும் வார இதழின் ஆசிரியராக இருந்து பல சீர்திருத்தக் கருத்துக்களைக் கவிதை வாயிலாக வெளியிட்டார்.

பாரதிதாசன், இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு எனத் தமிழுக்குச் செய்யும் தொண்டையே தம் வாழ்நாள் தொண்டாகச் செய்தவர். தமிழ், இன்பத் தமிழ், எங்கள் உயிருக்கு நேர் எனத் தமிழைத் தமது உயிரெனக் கருதிப் போற்றியவர். பின்வரும் கவிதையின் மூலம் அவரது தமிழ்ப் பற்றுப் பீறிட்டுப் பாய்வதனைப் படித்து மகிழ்வோம்.

தமிழுக்கும் அமுதென்று பேர் -அந்தத்

தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

தமிழுக்கு நிலவென்று பேர்- இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்

தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்

தமிழுக்கு மதுவென்று பேர் -இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்.

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்

தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

கிடைத்தற்கு அரிய அமுதம் எப்படிப்பட்ட சிறப்புக்களைக் கொண்டு இருக்குமோ அது போலவே தமிழும் எமது வாழ்விற்கு இனிமை தர இன்றியமையாதது. அதனால்தான் தமிழை அமுதம் என்றும் கூறுவார்கள். இனிமை பயக்கும் நிலவுபோல் போலவே தமிழும் இனிமை செறிந்த மொழியாம். மேலும் அது நம் மனித உயிருக்கு நிகரானது என ஒப்பிட்டுக்கூறுகின்றார்.

‘உண்டவர்களை மேலும் மேலும் உண்ணச்செய்து மயங்க வைக்கும் மது போல, மீண்டும் மீண்டும் படிக்கவைத்து, கற்பவர்களை இன்பூட்டும் பண்பு தமிழுக்கு உண்டு என மதுவிற்கு, இன்புற வைக்கும் தமிழ் உவமிக்கப்படுகின்றது. நாம் தமிழர் என உரிமை கொண்டு வாழ்வதற்கும், வாழ்வு செழித்து வளர்வதற்கும் வேர் போன்று இருப்பது எமது மொழியாகிய தமிழே. செழிப்பு மிகுந்த எம் தமிழ் மொழி அழிந்தால் அது எமது பசுமையான வாழ்வின் வேர் அழிவது போன்றது எனும் ஆழ்ந்த தத்துவம் இக் கவிதையில் வெளிப்படுகின்றது.

மொழி இன்றேல் இனம் இல்லை, மொழி அழிந்தால் இனம் மெது மெதுவாக அழிந்துவிடும் என்ற உண்மையை பாரதிதாசன் இலகுவாக விளக்குகின்றார். தமிழ் இனம் உலகம் எல்லாம் பரவி வளருவதற்கு, தமிழ் சமுதாயத்தின் வேருக்கு நீராகத் தமிழ் மொழி விளங்குகிறது எனக் கூறுகின்றார். அதே சமயம் நறுமணம் போல எங்கும் பரந்து, ஈர்க்கும் தன்மை கொண்ட மொழி, தமிழ் எனக் கவிஞர் குறிப்பிடுகின்றார்.

எமது இனத்தின் தோற்றத்திற்குக் காரணமானது தமிழ் என்ற எமது தாய்தான். தமிழ் இன்றேல் தமிழினம் இல்லை. அப்படிப்பட்ட இன்பத் தமிழ் எங்கள் வாழ்க்கையை வளமுடையதாக மாற்றக்கூடிய தீ ஆகும். ஆக்கத்திற்காக தீயின் சக்தியை உபயோகிப்பதனைப் போலத் தமிழின் பலத்தினால் எமது வாழ்க்கையை உயர்த்துதல் கை கூடும் என்ற கவிஞரது அசையாத நம்பிக்கை புலப்படுகின்றது.

உவமைச் சிறப்பு மிக்கதாக பாரதிதாசன் இக் கவிதையை ஆக்கி உள்ளார். அமுதையும், நிலவையும், நறுமணத்தையும், மதுவையும் தமிழின் சிறப்பான தன்மைகளுக்கு உவமிக்கின்றார். தமிழ் உயிர் எனக் கூறும் அவர் நீரும், வேரும், வேலும், வாளும், தோளும், தாயும், தீயும் போல தமிழ் எம்மை வாழவைப்பதாக உருவகம் செய்கின்றார்.

இயற்கையை, காதலை, தமிழை, தமிழ் நாட்டை, தேசியத்தினை பாடிய பாரதிதாசன் மேலும் பல்வேறு தலைப்புக்களைக் கொண்ட கவிதைகளுடன் மூன்று காவியங்களையும் பாடி உள்ளார். சஞ்சீவி, பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி, வீரத்தாய் என்ற அவரது கவிதைகள் யாவும் பலராலும் விரும்பிப் படிக்கப் படுபவை. "தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் " எனப் பாடியதிலிருந்து அவர் தமிழ் மேல் கொண்ட ஆழமான காதலை நாம் அறிய முடிகின்றது. குடும்ப விளக்கு, புரட்சிக்கவி, எதிர்பாராத முத்தம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு போன்றவை அவரது இனிய இசைநயத்துடன், உணர்ச்சிப் புயலான கருத்துக்களைக்கொண்ட, சிறந்த நூல்களாகும்.

"தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லை" என்றும் "தமிழை என்னுயிர் என்பேன்’’" என்றும் தமிழுடன் தனது உயிரை இணைத்துப் பாடிய மாபெரும் கவிஞராக, பாரதிதாசன் தமிழ் மக்கள் உள்ளங்களில் வாழ்கின்றார். இலக்கியத்திற்கான சாகித்திய அக்கடமியின் விருதுபெற்ற இக்கவிஞரின் நூல்கள் யாவும் தமிழ் நாடு அரசினரால் பொது உடமை ஆக்கப்பட்டுள்ளன.