பாடம் 6: சாலை நெரிசல்

நகரங்கள் விரிவடைதலினால் ஏற்படும் பாதகமான விளைவுகளில் சாலை நெரிசலும் ஒன்றாகும். போக்குவரத்து நெரிசலுக்கு சனத்தொகைப் பெருக்கத்துடன், சீரற்ற நகர நிர்மாணமும் சேரிகளின் பெருக்கமும் வர்த்தக, தனியார் உந்துப் பயன்பாட்டின் அதிகரிப்புமே பிரதான காரணங்களாக அமைகின்றன. இன்று பெரும்பாலான நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி கட்டுப்பாடின்றி மீறிக்கொண்டே போகின்றது. விரைந்து செல்ல முடியாதபடி மக்களும் வாகனங்களும் நிறைந்துள்ள நெரிசலால், போக்குவரத்தில் அசையாநிலை ஏற்படுகின்றது. இதனால் ஏற்படும் சிரமங்களைக் களைவதற்கான முயற்சிகள் நகர நிர்வாகங்களினாலும் அரசினராலும் மேற்கொள்ளப்பட்டு வருவதனை நாம் அறிவோம்.

மக்கள் பல்வேறு வழிகளால் தங்களுடைய பணிகளுக்காக, மாநகருள் ஒவ்வொரு காலைப் பொழுதிலும் நுழைகின்றனர். ஆனால், அவர்கள் உரிய நேரத்தில் தங்கள் பணியிடங்களுக்குச் சென்று சேர்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். உந்துகளை விரைவாகச் செலுத்த முடிவதில்லை. நெரிசல் காரணமாக வாகனங்கள் ஒவ்வொரு சைகை விளக்குளிலும், நீண்ட நேரம் தரித்து நிற்க வேண்டியுள்ளது.

தொழிலாளர்களும், பணியாளர்களும் உரிய நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியாதபோது, நேரம் பிந்துவதால் வேலையிடத்தில் கண்டிக்கப்படுவதுடன், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். பள்ளிப் பிள்ளைகளும் நேரத்துக்கு பள்ளி செல்ல முடிவதில்லை.

மக்கள் தினமும் தமது பயணத்தில் நேரத்தினை மேலதிகமாகச் செலவிடுவதனால் பெறுமதி மிகுந்த மனிதவலு ஒவ்வொரு நாளும் வீணடிக்கப்படுகிறது. அதனால் மறைமுகமாக நாட்டில் பெரும் பொருளாதாரச் சீரழிவு ஏற்படுகின்றது. பிரித்தானியாவில் 2006ல் வெளியிடப்பட்ட போக்குவரத்து அறிக்கையின்படி 2025ல் போக்குவரத்துப் பிரச்சனையால் ஏறத்தாழ 22 பில்லியன் பவுண்டுகள் (US $ 32 billion) நட்டம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அரசுகள் காலத்திற்குக் காலம் இது போன்ற நிலைமைகளைத் தவிர்ப்பதற்குப் பல திட்டங்களைச் செயற்படுத்தினாலும், இதுவரை எதுவுமே பிரச்சனைகளை முற்றாகத் தீர்ப்பதாக அமையவில்லை.

அரச நிறுவனங்களினால் சாலை நெரிசலைக் குறைக்க சில நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றுள் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நடுநகர் பகுதிகளில் தனியார்வாகனப் போக்குவரவைக் கட்டுப்படுத்துவதும் ஒன்றாகும். ஒற்றை வழிப்பாதைகள் அமைப்பதன் மூலமும் சாலை நெரிசலைக் குறைக்க முயல்கின்றனர். நகருக்குள் நுழையும் சிற்றுந்துகளைப் புறநகரில் நிறுத்துவதற்கு ஏற்றவகையில் தரிப்பிடம் அமைத்து அங்கிருந்து உள் நகருக்குள் பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் முறையும் உண்டு. உந்துகளை நிறுத்திவிட்டு, நகருக்குள் மிதியுந்துகளில் செல்லுதலை சில நகர சபைகள் ஊக்குவிக்கின்றன.

இது போன்ற நடவடிக்கைகளுடன் மேலும் சில திட்டங்களை கையாளுதல் மூலம் சாலை நெரிசலைக் கட்டுப் படுத்தலாம். காலையிலும், மாலையிலும் பணியாளர்களும், தொழிலாளர்களும் இலகுவாகப் போகவும், வரவும் ஏற்ற வகையில், அதற்குரிய கால எல்லையுள் பெரும் பார வண்டிகளின் உள் நுழைவைக் கட்டுப்படுத்தல் வேண்டும். வேண்டின், மக்கள் அடங்கிய இரவில் அவை ஏற்றுமதி, இறக்குமதிகளைச் செய்யும்படி கட்டளையிடலாம். உள்நகருக்குள் நுழையும் உந்துகளுக்கு ஆயம் (தெருவரி) அறவிடும் முறையும் பல நகரங்களில் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. பள்ளிகளும் அலுவலகங்களும் ஆரம்பிக்கும் நேரங்களை முன்பின்னாக நகர்த்துவதும் பயனளிக்கும்.

நடுநகரப் பகுதிகளுக்குள் உள்ள தொழிலகங்களையும், ஏராளமான பணியாளர் பணியாற்றும் நிறுவனங்களையும், புறநகரிலுள்ள துணை நகரங்களுக்கு மாற்றலாம். இதனால், நகரம் விரிவடைந்து மக்கள் அடர்த்தி குறையும் போது போக்குவரத்து நெரிசலும் குறையும். பொதுமக்கள், பொதுப் போக்குவரத்து வசதிகளைக் கூடிய மட்டும் பயன்படுத்தத் தூண்டும் பரப்புரைகளை மேற்கொண்டு, மக்கள் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் நெரிசலைக் குறைக்க முடியும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமானால் பொருளாதாரம் முன்னேறுவதுடன், பொதுமக்களின் வாழ்க்கைத் தரமும் வீட்டில் குடும்பங்கள் ஒன்றுகூடி வாழும் மகிழ் நேரமும் சிறப்புறும் என்பது உறுதி.