சமுதாயத்தின் வளர்ச்சிப் படிகளில் அறிவியல் வகிக்கும் பங்கு சாலப் பெரியது. நவீன அறிவியல் மனிதரின் வாழ்வில் தொடர்ச்சியாகப் பல புதுமைகளை அறிமுகப்படுத்தி வருவதனை நாம் அறியலாம். பண்டைக்கால சமூகங்களில் தீ, சில்லு, கல், கொம்பு ஆயுதம் என்பன மக்கள் வாழ்விற்கு உதவின. தொடர்ந்து இடம் பெற்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள், பல சமுதாய மாற்றங்கட்கு காலாக அமைந்து மனிதனின் அன்றாட நடவடிக்கைகளுடன், தவிர்க்க முடியாதபடி பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. கடந்த காலங்களில் பல அழிவுச் சக்திகளையும் அறிவியல் மூலம் சமூகங்கள் எதிர்கொண்ட போதும், தீமைகளைத் தவிர்த்து மனித வாழ்வில் நன்மைகளைப் பெருக்குவதற்கே பெரும்பாலான அறிவியல் வல்லுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய காலத்தில் பல அறிஞர்கள் தோன்றி மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற் படுத்தினார்கள். மதகுருமாரின் கட்டுப்பாட்டில், அடக்கப்பட்டிருந்த அறிவியல் 18ம் நூற்றாண்டில் படிப்படியாக சீர்திருத்தம் பெற்றது.. அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, பல புதிய ஆராய்ச்சிகளும் கண்டு பிடிப்புக்களும் மக்களின் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் தவறானவை என அறியவும் வழி வகுத்தன.
அச்சிடும் முறை 1454ம் ஆண்டில் கூடன்பெர்க் (G.J.Gutenberg) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதால் நூல்கள் பெருமளவில் அச்சிடப்பட்டு, மக்களிடையே அறியாமை இருள் நீங்கி, அறிவு பரவ ஆரம்பித்தது. முதலில் சீனாவில் மர அச்சு முறையில் பதிப்பித்த முறை அறிவியல் வளர்ச்சியால் இன்று பல படிகளைத் தாண்டி முப்பரிமாண அச்சடித்தல் முறையில் நூல்கள் வெளியாகின்றன. இவற்றால் மனிதனின் சிந்தனை விரிவு பெற்று பரந்த மனப்பான்மை கொண்டவனாக வாழ முடிகின்றது.
மக்களின் வாழ்க்கை முறையில் மின்சக்தியை வசப்படுத்தியதும், மின் குமிழ்களைப் பாவனைக்குக் கொண்டுவந்ததும், கணக்கில் அடங்கா வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. நீராவிச் சக்தியைக்கொண்டு பல பாரிய எந்திரங்களை இயக்கியதனைத் தொடர்ந்து, நிலக்கீழ் எண்ணைமூலம் இயங்கும் இயந்திரங்கள்,தரைவாகனங்கள், பறக்கும் விமானங்கள் என்பன மனிதனின் கனவுகளைத் தோற்கடிக்கும் சாதனைகளாக அமைகின்றன. விண்வெளி ஆராய்ச்சிகளால் 1969ம் ஆண்டு, மனிதன் சந்திரனுக்கு விண்கலனில் பயணம் செய்து வர முடிந்தது. அண்மையில் நாசா (NASA) செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தினை ஏவி அதன் மூலம் பல ஆய்வுகள் செய்ய முடிந்தது. தொடர்ச்சியாக செய்மதிகள் மூலம் மற்றைய கிரகங்களைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் மேலும் விபரமாக ஆராய முடிகின்றது.
அறிவியலின் வளர்ச்சியால் கண்டறியப்பட்ட தொடர்பு சாதனங்கள் மக்கள் வாழ்வில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. 1870 ஆம் ஆண்டு Alexander Graham Bell என்பவரால் தொலைபேசி கண்டறியப்பட்ட போது அது மின்கம்பி இணைப்புக்கள் ஊடாக செயல்பட்டது. பின்னர் மின்குறிப்பு அலைகளை உபயோகிக்கும் கம்பி இல்லா தொலைபேசி பாவனைக்கு வந்தது. இன்றோ தொலைத் தொடர்பாடல் செயற்கை மதிகள் மூலம், செயல்படுகின்றது. தற்போது இணையத்தில், ஒலியூடான தொலைபேசிகள் அகன்ற அலை இணைய இணைப்புக்களைப் பிரயோகிக்கின்றன.
இன்று கணினியின் உபயோகம் பல துறைகளில் பயன்படுகின்றது. இதன்வழியாக டிம் பெர்நேர்ஸ் - லீ ( Tim Burners Lee) என்பவரால் 1994 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வையக வியாபக வலை (World Wide Web :www ) மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. இணையத் தளத்தின் பாவனை மூலம் உலகம் சுருக்கப் பட்டு விட்டது. மின் அஞ்சல்கள் மூலமும், முகம் பார்த்து பேசும் வசதி கொண்ட தொலை பேசி மூலமும் உலகின் ஒவ்வொரு கோடியிலும் இருந்து கொண்டே ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளுகின்றனர். ஏறக்குறைய இருபத்தைந்து வீதத்திற்கு மேலான மக்கள் இணையத்தளப் பாவனையில் ஈடுபடுகின்றனர். கணினி மூலம் நாளிதழ்களும் புத்தகங்களும் வெளியிடும் முறைகளும் விரிவும், விரைவும் பெற்றுள்ளது.
எமது வாழ்வில் பயன் படுத்தும் பல கருவிகள் மின்னணு (Electronics) பொறியியல் முறையில் உற்பத்தியாக்கப்படுகின்றன. அவற்றில் கைத்தொலை பேசிகள், தொலைக்காட்சித் திரைகள். வங்கி அட்டைகள் போன்ற பல பொருட்களில் மின்நுண்மங்கள் (micro chips) உபயோகிக்கப்படுகின்றன. இவை கண்டறியப் பட்டதனால் வர்த்தகத் துறையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பொழுதுபோக்கு, போக்குவரத்து, பாதுகாப்பு, குற்றத்தடுப்பு போன்ற பல வேறு துறைகளிலும் பல பொறிகள் பயன்படுகின்றன. இவற்றினை உற்பத்தி செய்யும் வர்த்தக நிலையங்கள் பல கோடி பெறுமதியான பன்னாட்டு வணிகத்தில் ஈடுபடுகின்றன பலருக்கு வேலைவாய்ப்புகள் அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரங்கள் வளர வழி வகுக்கின்றன.
அடுக்களையில் இருந்து அலுவலகம் வரை உபயோகிக்கும் பல பாவனைப் பொருட்கள் இன்றைய மனிதரின் அன்றாட வாழ்விற்கு இன்றி அமையாதுள்ளன. மக்களின் நேரத்தை மட்டும் அன்றி பணத்தையும் மிச்சம் பிடிப்பதனால் இப் பொருட்களின் தேவை அதிகரித் துக் கொண்டே போகின்றது. இதனால் படிப் படியாக மக்களின் நடவடிக்கைகளில் நவீன அறிவியலின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே போகின்றமை தவிர்க்க முடியாத அம்சமாக உள்ளது.
மனிதன் படிப் படியாக எந்திரங்களுக்கு அடிமையாகின்றான் என்று குறைபடுவோரும் உண்டு. ஆக்கபூர்வமாக அறிவியல் பயன்பட வேண்டுமானால், கடந்த காலங்களைப் போல உலகப் போர்களினாலும் விபத்துக்களினாலும் மக்கள் அழிவது தவிக்கப்படல் வேண்டும். அறிவியலை மனிதரின் முன்னேற்றத்திற்கு மாத்திரம் உபயோகிப்பதில் உலக நாடுகள் இணக்கத்திற்கு வருவது அவசியமானது.
அறிவியலின் பல பிரிவுகள் பல நூற்றாண்டு காலமாக கல்விக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு பயிற்றுவிக்கப் படுகின்றன. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியல், உயிரியல், சமூகவியல் ஆகிய பெரும் பிரிவுகளாக கற்கை நெறிகள் இன்றைய அறிவியலில் அடங்கி உள்ளன. நுண்ணிய ஆய்வுக்கு உட்படும் அறிவியலின் வளர்ச்சி கற்கை நெறிகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. அறிவியல் வளர்ச்சியால் இன்று மேலும் பல பல உள் பிரிவுகளாக கற்கை நெறிகள் வகுக்கப்பட்டு, உலகம் எங்கும் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் ஆழமாகப் பயிலக் கூடியதாக உள்ளது. ஆய்வுக்கூடங்களில் தொடர்ந்து இடம் பெறும் ஆய்வுகள் மனிதரின் வாழ்வின் சகல அம்சங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணமே உள்ளன.
பண்டு தொட்டு சமுதாய முன்னேற்றத்தின் பாதை பாரம்பரிய முறையிலான கல்வியில் தங்கி இருந்தது. அதன் காரணமாக படிப் படியாக வளர்ந்து வரும் அறிவியல் கல்விக்கான தேவை எமது சமுதாயத்தின் இடையறாத எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. அதன் தளத்தில் வளரும் புதிய அணுகு முறைகள் கொண்ட அறிவியல் வளர்ச்சி இன்றைய வாழ்க்கை முறையில் அதிக செல்வாக்கினைச் செலுத்தும் பாங்கு தவிர்க்க முடியாததாக அமைகின்றது.