உபயோகிப்பவர்களுக்கு தற்காலிக மயக்கத்தையும், சுய நினைவு உணர்வையும் மழுங்கச் செய்து மிதப்பு உணர்வைத் தரும் பொருட்களைப் போதைப் பொருட்கள் என்பர். பல்வேறு வர்த்தகப் பெயர்கள் கொண்ட மதுபான, புகையிலை வகைகள், கெரோயின் (Heroin), கொக்கேயின் (Cocain), மேதடோன் (Methadone), எல்.எஸ்.டி. (L.S.D.), எக்ஸ்டசி (Ecstacy), கனாபிஸ் (Cannabis), மர்ஜ§வானா (Marjuvana) போன்றவை குறிப்பிடக்கூடிய போதைப் பொருட்களாகும். இவற்றுள் பலவற்றின் உற்பத்தியும் விற்பனையும் சட்ட பூர்வமாகத் தடை செய்யப்பட்டவையாகும். ஆரம்பத்தில் இவற்றுள் சில மருத்துவ தேவைகளுக்காகவே உபயோகிக்கப்பட்டன. சட்டபூர்வமாகச் சந்தைப் படுத்தப்படும் மதுபானங்கள் மகிழ்வுக்காக பருகப்படினும், அளவுக்கு மிஞ்சினால் அவையும் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும். பாதகமான விளைவுகளைத் தரும்.
இத்தகைய போதைச் சரக்குகள், பொதுமக்களுக்கு விளங்காத பெயர்களுடனும், வெவ்வேறு வடிவங்களுடனும், பெரும்பாலும் மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன. சமூக எதிரிகள் சட்டங்களை மீறி போதைப் பொருள் விற்பனையால் பல கோடி பணத்தை பெறுகின்றனர்.
ஆப்கானிஸ்தானிலும், இலத்தீன் அமெரிக்க நாடுகளான பேரு, பொலிவியா, கொலம ;பியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளிலும் போதைப்பொருள் உற்பத்தி செய்யப்படும். இப் பொருட்கள் திருட்டுத்தனமாகக் கைதேர்ந்த கடத்தல் வலையங்கள் மூலம் பரப்பப்பட்டு, உலகு எங்கணும் சமூக விரோதிகளால் விற்கப்படுகின்றன.
இப்பொருட்களை நுகர்பவர்கள் தம்மை அறியாமலே அவற்றிற்கு அடிமைகள் ஆகின்றனர். தற்காலிகப் பேரின்ப மிதப்பு அனுபவத்தினைப் பெறுவதன் மூலம், தமது கடமைகளிலிருந்தும், உரிமைகளிலிருந்தும் விடுபட்டு மயங்குவதை, இன்பம் என்று எண்ணும் மாய வலைக்கு உட்படுகிறார்கள். விளையாட்டு வீரர்களும் பாடகர்களும் தாம் வெற்றிபெறும் நோக்குடன் தமது ஆற்றலை தற்காலிகமாக ஊக்கும் டெஸ்ரொஸ்ரோன் (வநளவழளவநசழநெ) எக்ஸ்ரசி முதலிய ஸ்ரிரோயிட் மருந்துப் பொருட்களை உபயோகிக்கின்றனர். அவர்களின் இச்செயல்கள் தவறான முன் உதாரணங்களாகி, இளம் சிறார்கள் வழி தடுமாறக் காரணமாகின்றன.
படிப்படியாக மனச்சோர்வு, மன அழுத்தம், கடுஞ்சினம், மறதி, பொய் கூறல், திருடுதல் போன்ற பல்வேறு உளப் பாங்கான தீங்குகளுக்கு போதைப் பொருட்களைப் பாவிப்பவர்கள், ஆளாகின்றனர். மேலும், பசி இன்மை, தூக்கம் இன்மை, உடல் நிறையும், உணவு நாட்டமும் குறைதல், வாந்தி, சுவாசக் கோளாறு, போன்ற பல உடல்ரீதியான தீங்குகட்குத் தம்மைத் தாமே அறியாமல் ஆட்படுத்தி வருத்திக் கொள்கிறார்கள். இவர்கள் தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களையும் வருத்தித் தமது வாழ்க்கையைத் துன்ப மயமாக்குகிறார்கள். மேலும் போதைப் பொருளுக்கு மீளா அடிமைகளாகித் திருந்த முடியாது, நோயாளிகளாகி நடைப் பிணமாகின்றனர்.
இன்றைய சுய கட்டுப்பாடு குறைந்த இளைஞர்கள் மத்தியில், வெகு விரைவாகப் பரவி வரும் தீமை பயக்கும் ஒரு கலாச்சாரமாகப் போதைப் பொருள் பாவனை காணப்படுகிறது. பாடசாலைகள், சமூக நிறுவனங்கள் மூலம், தீங்கினைத் தவிர்த்து வாழும் நெறிகளை அறிந்து பின்பற்றுதல், மக்களின் நல்வாழ்விற்கு வழிவகுக்கும்.
தமது சூழலில் தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையும் பாவனையும் இடம் பெறும் போது அது காவல்துறையின் வேலையென பாராமுகமாக இருக்கும் மக்களின் மனப் பான்மை மாறுதல் வேண்டும். பொது மக்கள் இவ்வாறான செயல்பாடுகளைத் தடுக்கும் பொருட்டு காவல்துறைக்கு தம்மால் முடிந்தவரை ஒத்துழைப்புக் கொடுத்தல் வேண்டும்.
ஏழ்மை, வேலைவாய்ப்பு இன்மை, அறியாமை போன்றவற்றால், பலர் போதைப் பொருள் உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய சமுதாயப் பின்னடைவுகளை அடையாளம் கண்டு அவற்றினை நீக்கும் வழிகளை செயற்படுத்தல் மிக அவசியம்.
உலக நாடுகள் பலவும், கடுமையான சட்டங்களையும், போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டவர்களை திருத்தும் நிலையங்களையும் நடைமுறைப் படுத்துகின்றன. சட்டங்கள் ஆக்குவது மட்டும் பலனளிக்காது. பொதுமக்களுக்குப் போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வுகளை ஊட்டும் செய்திகளை, யாவரும் எளிதில் விளங்கும் முறையில் நவீன ஊடகங்கள் மூலம், மேலும் பிரபலம் அடையச் செய்தல் அரசினதும், சமூகத் தலைவர்களதும், சமூக சேவையாளர்களதும், சிந்தனையாளர்களதும் தலையாய கடமையாகும்.